ஆந்திர மாநிலம் சித்தூரில் காட்டு யானை தாக்கி நேற்று கணவன் மனைவி உயிரிழந்த நிலையில், காட்பாடி அருகே அதே யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த யானை தாக்கியதில் ஆடுகளும் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் சுற்றித் திரிந்து வந்த ஒற்றைக் காட்டு யானை, வெங்கடேசன்-செல்வி ஆகிய இருவரை மிதித்துக் கொன்றது. அதனைத் தொடர்ந்து சித்தூர் மாவட்ட வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் யானையைக் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று தமிழக எல்லைக்குள் நுழைந்த அந்த காட்டு யானை வேலூரை ஒட்டியுள்ள பெரிய போடிநத்தம் பகுதியில் புகுந்தது.
இந்நிலையில், வசந்தா மற்றும் அவரது கணவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தபோது, காலை 5 மணியளவில் வெளியே கட்டப்பட்ட ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வசந்தா வெளியே வந்து பார்த்த பொழுது காட்டு யானை தும்பிக்கையால் ஆட்டைத் தாக்கியது கண்டு அதிர்ந்தார். வசந்தாவையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேபோல் ஆடும் உயிரிழந்துள்ளது.
இந்த பகுதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காடு வனச்சரகப் பகுதி என்பதால் ஆற்காடு வனத்துறையினர் அந்த யானையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மகிமண்டலம் காப்புக்காடு பகுதியில் தற்போது அந்த யானை இருக்கலாம் என வனத்துறையினர் யூகித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.