போச்சம்பள்ளி அருகே, ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த கணவரை, மனைவியே ஆண் நணவருடன் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள என்.தட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (35). டைல்ஸ் வியாபாரி. மேலும், சொந்தமாக சரக்கு ஆட்டோவும் இயக்கி வந்தார். இவருடைய மனைவி சந்தியா (27). கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வியாபாரம் தொடர்பாக கந்தன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து மார்ச் 14ம் தேதி இரவு திடீரென்று அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அங்கே கந்தன் கத்தியால் குத்தப்பட்டு, பேச்சு மூச்சின்றிக் கிடப்பதைப் பார்த்தனர். அவரை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இதில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காதல் தம்பதிகளின் ஆரம்பக்கட்ட திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுள்ளது. கந்தன் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி சில நாட்கள் தொடர்ச்சியாக வெளியூரில் தங்க நேர்ந்தது. அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.
இந்த நிலையில் கந்தன் வீட்டிற்கு என்.தட்டக்கல்லைச் சேர்ந் சிவசக்தி (23) என்ற வாலிபர் தினமும் பாக்கெட் பால் வாங்கிக் கொடுத்து வந்தார். இதனால் சந்தியாவுக்கும் சிவசக்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. கந்தன் வெளியூர் சென்று விடுவது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்தது. ஒருகட்டத்தில் அவர்கள் தனிமையில் சந்தித்து உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இவர்களின் ரகசிய உறவு அரசல் புரசலாக வெளியே கசிந்தது.
இதையறிந்த கந்தன், சந்தியாவின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்தார். மனைவியின் கைப்பேசியை ஆய்வு செய்ததில் சிவசக்தியுடன் வாட்ஸ்ஆப் வழியாக பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தன், சிவசக்தியுடன் உள்ள தொடர்பை உடனடியாக கைவிடுமாறு எச்சரித்தார். ஆனாலும் கணவருக்குத் தெரியாமல் சந்தியா ரகசியக் காதலனைச் சந்தித்து வந்தார். இந்த நிலையில் கந்தன், வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சந்தியா, ஆண் நண்பர் சிவசக்தியை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார். சிவசக்தியும் சிறிது நேரத்தில் சந்தியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
இது ஒருபுறம் இருக்க, மனைவியையும் சிவசக்தியையும் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டு இருந்த கந்தன், தான் வெளியூர் செல்வதாக நாடகமாடி இருக்கிறார். இந்த நிலையில் தான், வீட்டிற்கு சிவசக்தி வந்ததை தெரிந்து கொண்ட கந்தன், சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திடீரென்று வந்து சேர்ந்தார். கந்தனின் திட்டத்தை அறியாத இருவரும் தனிமையில் இருந்தபோது அவரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். இதையடுத்து கந்தன் மனைவியை அடித்து உதைத்தார். அப்போது சந்தியாவும் சிவசக்தியும் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கந்தனின் கண்களில் தூவினர். இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார்.
இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கந்தனின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் கந்தன் மூர்ச்சையானார். இதையடுத்து வீடு முழுவதும் சிதறிக்கிடந்த ரத்தத்தை இருவரும் கழுவிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் உள்ளூரில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் கைது செய்தனர். போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய பிறகு சிவசக்தியை சேலம் மத்திய சிறையிலும் சந்தியாவை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.