தேர்தல் தோல்வி பலரையும் பாடாய்படுத்திவிடுகிறது. தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவும் இல்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன என்பதை ஏனோ சிலர் உணர்வதில்லை. சாத்தூரில் தேர்தல் தோல்வியால் வேட்பாளர் ஒருவரின் கணவர் உயிரை மாய்த்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்த சுகுணா-வின் கணவர் நாகராஜ், நகராட்சியில் மேஸ்திரியாகப் பணியாற்றுபவர். இவருடைய மனைவி சுகுணா, ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்று அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்துள்ளார்.
சாத்தூர் நகராட்சி 19- வது வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவாயின. இங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுகுணா 215 வாக்குகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் சுபிதாவிடம் 280 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த நாகராஜ் விஷ மாத்திரைகளை விழுங்கிவிட்டார். இதனை அறிந்த உறவினர்கள், அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார்.
சாத்தூர் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.