விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டகரையைச் சேர்ந்தவர் 28 வயதான ஆனந்த். இவரது மனைவி நவநீதம் (25). இவர்கள் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு, பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். ஆனந்த் தச்சு வேலை செய்து வருகிறார். தினசரி உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, குடும்பம் நடத்துவதற்கு மனைவியிடம் கொடுக்காமல், குடித்துவிட்டு மனைவி நவநீதத்தைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
அதோடு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடித்து உதைத்துச் சித்ரவதை செய்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்குச் சென்ற ஆனந்த், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார்.
தகராறு நடக்கும்போது வீட்டில் இருந்த குறுவாளை எடுத்து மனைவி நவநீதம் தலையில் வெட்டியுள்ளார். இதனால், படுகாயமடைந்த நவநீதம் சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நவநீதத்தை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். சில தினங்களில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நவநீதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சாந்தி அவர்கள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார்.
அந்தத் தீர்ப்பில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலைசெய்த கணவன் ஆனந்துக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.
இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜராகி, தகுந்த ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் வாதாடி குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வழி செய்துள்ளார். மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.