கரோனோ ஊரடங்கிலும் திருச்சி மாவட்ட புறநகர் பகுதிகளான காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரையை ஒட்டிய கிராமங்களில் மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது. இந்த மணல் கொள்ளைக்கு அந்தக் கிராம பள்ளிச் சிறுவர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் மணல் கொள்ளையர்கள்.
திருச்சி கொள்ளிடம் நொச்சியம், வாத்தலை, முசிறி வரையிலான ஆற்றங்கரை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது. இதில் மணல் திருடும் கும்பல் முழுவதுமாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பண ஆசை காட்டி அழைத்துக்கொண்டு செல்கிறார்கள்.
இந்தக் கரோனோ ஊரடங்கு பிரச்சனையில் பணத்தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் இந்த மணல் கொள்ளைக் கும்பல் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இந்தச் சிறுவர்களை, பாக்கெட் சாராயம், கஞ்சா, மணல் கடத்தல் எனச் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதன் மூலம் கையில் பணம் வந்தவுடன் இளசுகள் போதையைத் தேடி அலைகின்றனர்.
சமீபத்தில் வாத்தலை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா மணல் திருட்டு, போதைப் பொருட்கள் போன்றவற்றில் தொடர்புடைய இளம் சிறுவர்களைப் பிடித்து பனிஷ்மென்ட் ஆக காலை மாலை இரண்டு வேளையும் காவல் நிலையம் வந்து கையெழுத்து விடும் படி சொன்னதுடன் தலை முடிகளை சரியாக வைத்துக்கொள்ளாத இளசுகளுக்கு முடிவெட்டி அனுப்பி வைத்தார்.
இந்த ஊரடங்கில் பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் பாடங்களை மறந்த தங்கள் குழந்தைகள் இந்தச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதைக் கண்ட வீட்டில் உள்ள பெற்றோர்களும் அவர்களைக் கண்டிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும் முசிறி வாத்தலை கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுவர்களை ஈடுபடுத்தி மணல் கொள்ளை நடப்பதைத் தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.