வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் (அக்.14) கனமழைக்கும் நாளை (அக்.15) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், அக்டோபர் 17 திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்திற்கு அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழைபொழிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, தாமரைப்பாக்கம், சோழவரம், செங்குன்றத்தில் கன மழை பொழிந்து வருகிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், திண்டிவனம், வளவனூர் பகுதிகளிலும், திருவண்ணாமலையில் ஆரணி, ஆதனூர், ராட்டினமங்கலம், மலையம்பட்டு ஆகிய பகுதிகளிலும் கன மழை பொழிந்து வருகிறது. திருவாரூரில் நன்னிலம், வலங்கைமான், குடவாசல் பகுதிகளிலும், விருதுநகரில் புளியம்பட்டி, பாளையம்பட்டி, வாழ்வாங்கி, அருப்புக்கோட்டை, செட்டிகுறிச்சி பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.