தமிழகத்தில் வருகிற டிசம்பர் 27 மற்றும் 30- ஆம் தேதிகளில் கிராம ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதில் ஊரகப்பகுதிகளில் வாக்காளராக உள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியில் செலுத்துவதற்கு உரிய நடைமுறைகளை ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் வெவ்வேறு வழிகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டதால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியனோ., "சிவகங்கை மாவட்டத்தில் வருகிற நவம்பர் 27 மற்றும் 30- ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்பட்டு, இரண்டு கட்ட பயிற்சியை நிறைவு செய்து உள்ளனர். இதில் ஊரகப்பகுதிகளில் வாக்காளராக உள்ள ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியில் செலுத்துவதற்கு உரிய படிவங்களை வழங்குவதிலும், தேர்தல் பணிச்சான்று பெறுவதிலும் மாவட்ட முழுவதும் நடந்த பயிற்சி மையங்களில் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட அறிவுறுத்தப்பட்டதால் வாக்குப்பதிவு அலுவலர்களாகிய ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
சில இடங்களில் முறையான திட்டமிடல் இல்லாததால் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் தங்கள் வருகையைக் கூட பதிவு செய்ய இயலாத நிலை இருந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களிடம் படிவம் 15 ஐ பெற்றுக்கொண்டு அஞ்சல் வாக்குச்சீட்டுகளோ அல்லது தேர்தல் பணிச்சான்றோ அவர்களது முகவரிக்கோ அல்லது நேரடியாகவே வழங்கப்படும். ஆனால் இம்முறைகளை சில தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பின்பற்றாமல் ஆசிரியர்களை அலைக்கழித்துள்ளனர். மேலும் இரண்டாம் கட்ட பயிற்சி நடந்த மையங்களில் சில இடங்களில் முறையான திட்டமிடல் இல்லாததால் வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவதில் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்கு தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளை முறையாக அளிக்க வேண்டும் எனவும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் நேர்மையாக நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதனையே மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயகாந்தன் அவர்களுக்கு கோரிக்கை மனுவாக அனுப்பியுள்ளோம்" என தெரிவித்தார்.