
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய அப்போதைய தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது. ஆனால், விசாரணை இன்னும் முடிவடையாததாலும், ஆஜராக வேண்டிய பலர் ஆஜராகாததால் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுக்கொண்டேவருகிறது. இந்நிலையில், சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். விசாரணை ஆணையம் 2017ஆம் ஆண்டே அமைக்கப்பட்டாலும் இதுவரை அந்த ஆணையம் ஒரு இடைக்கால அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. எனவே விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வழக்கு இன்று (02.07.2021) தலைமை நீதிபதி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் ஆணையத்திற்கு உத்தரவிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பதில் அளிப்பதற்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.