பிரதமர் மோடியின் பிறந்தநாளை (செப்.17) தமிழக பாஜகவினர் கொண்டாடிய நிலையில், அவர் எழுதிய 'பரீட்சைக்கு பயம் ஏன் ?' என்கிற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை கேளம்பாக்கம் ஆனந்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற BLISS 2018 மாணவர்களுக்கான கலை விழாவில் மோடி எழுதிய நூலின் தமிழ் வடிவம் வெளியிடப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் பெருமளவில் திரண்டிருந்தனர். முதல் பிரதியை பிரபல மாணவர் பயிற்சியாளரும் திரைப்பட நடிகருமான தாமு வெளியிட, கலசலிங்கம் பல்கலைக்கழகம் சேர்மன் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.
'எக்ஸாம் வாரியர்ஸ்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவு மாநில தலைவருமான A.N.S.பிரசாத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விழாவில் பேசிய நடிகர் தாமு, "பரீட்சைக்கு பயம் ஏன் என்னும் பிரதமரின் இப்புத்தகம் ஒவ்வொரு மாணவரும், ஆசிரியரியரும், பெற்றோரும் படிக்கவேண்டிய புத்தகம். மாணவர்களுக்காக நேரம் ஒதுக்கி இப்புத்தகத்தை தந்துள்ள பிரதமருக்கு நன்றிகள். இந்த சமயத்தில் கலாம் ஐயா அவர்கள் இருந்திருந்தால் பிரதமரின் இந்நூலிற்கு மகிழ்வோடு அணிந்துரை எழுதியிருப்பார். அந்தளவுக்கு மாணவ மாணவிகளின் கல்வி அறிவிற்கான புத்தகமாக இருக்கிறது. இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது, பரிட்சையைக் கண்டு பயப்படுபவர்களிடமிருந்து பயம் விலகிப் போயிருக்கும்" என்றபோது அரங்கம் முழுவதும் கரவொலிகளால் அதிர்ந்தன.