கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அம்மன் கோவில் தெருவைத் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகா (19). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த 8 ஆம் தேதி மாலை தனது வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த மர்ம நபர் வயிற்றுப் பகுதி மற்றும் கைகளில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த திலகா, தனது மாமா மகேந்திரனுக்கு போன் செய்து கத்தியால் குத்தப்பட்டதை கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அப்பெண்னின் மாமா மற்றும் அவரது பெற்றோர் திலகாவை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கருவேப்பிலங்குறிச்சி பேரளையூரை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(19) எனும் இளைஞரை கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே திலாகவும் ஆகாஷும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் நண்பர்களாக பழகியுள்ளனர். பள்ளி படிப்பு முடிந்து திலகா தேர்ச்சி பெற்று தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்தார். ஆனால் ஆகாஷோ நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஊதாரித்தனமாக சுற்றிவந்துள்ளான். இதனால் திலகா ஆகாஷிடம் ஊதாரித்தனமாக சுத்தாதே படி என அறிவுரை கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் காதலிப்பதாக ஆகாஷ் கூறியுள்ளான்.
தொலைபேசியிலும், வாட்ஸ்அப்பிலும் பேசி வந்துள்ளான். திலகாவின் பேச்சை கேட்காமல் ஆகாஷ் மேலும் ஊதாரித்தனமாக சுற்றியதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ் அப்பில் ஆகாஷின் எண்ணை தடை செய்துள்ளார் திலகா. தன்னை பிடிக்கவில்லை என தவிர்த்து விட்டதாக ஆத்திரம் அடைந்த ஆகாஷ் திலகவதியின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்று இதுகுறித்து பேசும்பொழுது நடந்த வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலகாவை வயிறு, கை ஆகிய இடங்களில் குத்திவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் கதவை தாழிட்டுவிட்டு வந்ததாகவும், கொலை செய்ய உபயோகித்த கத்தியை வீட்டின் கொல்லைப்புறத்தில் தூக்கி எறிந்ததாகவும் ஆகாஷ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
இந்த விசாரணையில் தான்தான் கொலை செய்ததாக ஆகாஷ் ஒத்துக்கொண்டான். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷை தங்களிடம் ஒப்படைக்க கோரி ஆத்திரத்துடன் பெண்ணின் உறவினர்கள் கடலூர் கருவேப்பில்லைங்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சாலைமறியலை கைவிட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன்பின் அவர்களுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுடிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.