Skip to main content

''செல்லூர் ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் பங்கேற்காதது ஏன்?''-அமைச்சர் மூர்த்தி கேள்வி! 

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

'' Why Cellur Raju and RP Udayakumar did not participate? '' - Minister Murthy Question!

 

எதிர்க்கட்சி சட்டமன்ற தொகுதிகளில் கரோனோ தடுப்பு பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக  உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மதுரை மாட்டுதாவணி மலர் சந்தை செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் மல்லிகை உள்ளிட்ட பூ சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து பல்வேறு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மதுரை மாட்டுதாவணி மலர் சந்தையை செயல்படுத்துவதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை  அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,

 

''மாட்டுதாவணி மலர் சந்தை ஆம்னி பேருந்து நிலையத்தில் இடமாற்றம் செய்து செயல்படுத்தப்பட உள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மலர் சந்தையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

 

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  வைத்த  குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

 

''எதிர்க்கட்சி சட்டமன்ற தொகுதிகளான மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைசொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் புகார் அளிக்கின்றனர். பாரபட்சம் காட்டுவதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடியாக புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் புகார்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது''என்றார்.

 

''கரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டங்களில் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்ட நிலையில், மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் பங்கேற்காதது ஏன்?'' என கேள்வி எழுப்பிய அமைச்சர், ''கரோனா தடுப்புப்பணியில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்