மணிப்பூர் விவகாரம் குறித்து அதிமுக வாய் திறக்காதது ஏன் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படன.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தெரிவிக்கையில், “தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். கைம்பெண் உதவித்தொகை, ஆதரவற்ற முதியோருக்கான மாத உதவித்தொகை, ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள்.
உதவித் தொகைகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கக் கூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைம்பெண், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு 845 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும். வரும் 24 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்துப் பேசுகையில், “மணிப்பூரில் மிகப்பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே இதனைக் கண்டித்திருக்கிறார். நாட்டில் பெண்கள் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு கட்சியும், அரசியல் தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருக்கும்போது, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இதுவரை இது குறித்து வாய் திறக்காது மௌனமாக இருப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அடிமையாக இருக்கவில்லை என்று சொல்லுகிறார். ஆனால் மணிப்பூர் விவகாரம் குறித்து அவரிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வராததைப் பார்க்கும்போது அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.