Skip to main content

''மாடு யாருடையது...?'' விடை தெரியாத வழக்கால் பசுவையும், கன்றையும் பராமரிக்கும் காவல்நிலையம்!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

Whose cow ....? Police station to take care of cows and calves due to dispute!

 

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்(60). இவர் வளர்த்து வந்ததாகக் கூறப்படும் பசு மாடு, 10 நாட்களுக்கு முன் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கூட்ரோட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டில், மாடு ஒன்று கன்று ஈன்றுள்ள தகவல் அசோக்கிற்கு தெரிய வந்தது. விக்னேஸ்வரனின் வீட்டிற்கு விரைந்த அசோக், அது தன்னுடைய மாடு என கூறி கேட்டுள்ளார். அவர் தராததால் பசு மாட்டை மட்டும் தனது வீட்டிற்கு ஓட்டி வந்து விட்டார்.

 

தகவலறிந்த விக்னேஸ்வரன், அசோக் வீட்டிற்குச் சென்று, தன்னுடைய மாட்டை ஏன் ஓட்டி வந்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆரோவில் போலீசார் இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் விட்டுக் கொடுக்காமல் மாடு தங்களுடையது என வாதம் செய்தனர்.

 

இதனால், மாடு யாருடையது என்பதை விசாரித்து முடிவு செய்ய திட்டமிட்ட போலீசார் பசு மாடு தங்களுடையது என்பதற்கான ஆதாரத்தை எடுத்து வருமாறு கூறி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர். மேலும், பிரச்சனை முடிவுக்கு வரும் வரை பசுவையும், கன்றையும் பிரிக்க வேண்டாம் என்று போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து கட்டும்படி அசோக், விக்னேஸ்வரனிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து இருவரும் பசுவையும், கன்றையும் ஓட்டி வந்து  ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கட்டினர். மூன்று நாட்களாக மாட்டின் உரிமையாளர் யார் என கண்டுபிடிக்க முடியாத சூழலில் பசுவுக்கும், கன்றுக்கும் வைக்கோல் போட்டு போலீசார் மாடு கன்றுக்குட்டியை பராமரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்