கோவையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவிலான தனியார் ஆம்னி பேருந்துகள் கோவையிலிருந்து இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவையிலிருந்து சென்னை, பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், பெங்களூர், மதுரை, நெல்லை, காரைக்குடி, கேரளா என தினசரி 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பல நேரங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஹவாலா பணம் உள்ளிட்டவை பேருந்துகள் மூலமே கடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்ற பேருந்தில் ஹவாலா பணம் கடத்தப்பட்டது கேரள போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து கோவைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தினந்தோறும் கோவை காந்திபுரம் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்துகள் இடையிடையே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றுவதால் மாலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமலும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசு போக்குவரத்து கழக மேலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையேயான கலந்தாய்வு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் கோவை மாநகர மத்திய சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மற்றும் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர்கள் காவல்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகளில் தம்பதி சகிதம் பயணிக்கும் பயணிகளிடம் உரிய ஆவணங்களை சரி பார்க்குமாரும், வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்களை சோதனையிட்டு அவற்றை ஏற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் வாரக் கடைசி மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் எண்ணிக்கையை கருதி தரமற்ற பேருந்துகளை இயக்கக்கூடாது என்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுமாரும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். தொடர்ந்து பேருந்து உரிமையாளர்களின் சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்த காவல்துறையினர் அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவன நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.