புதிதாக வாக்களித்த இளம்பெண்கள், நடப்பு அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து வாக்களித்து இருப்பதையும், அவர்களிடையேயும் அரசியல் ஆர்வம் அதிகரித்து இருப்பதையும் காண முடிந்தது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (பிப். 19) நடந்தது. மாநகர பகுதிகளைக் காட்டிலும், கிராமங்களை உள்ளடக்கிய பேரூராட்சி, நகராட்சிகளில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கணசாலை, தாரமங்கலம் நகராட்சிகளிலும், மாநகராட்சி பகுதியிலும் முதல்முறை வாக்களித்த இளம் பெண் வாக்காளர்கள் சிலரிடம், எந்தெந்த அம்சங்களை முன்னிறுத்தி வாக்களித்தீர்கள் என கேட்டறிந்தோம். அவர்களிடம் இருந்து எதிர்பாராத சில பதில்களும் கிடைத்தன.
தாரமங்கலம் நகராட்சியில் வசிக்கும் கல்லூரி மாணவி உஷா (வயது 19), அவருடைய அக்காவும் பி.இ., பட்டதாரியுமான பூஜா (வயது 23) ஆகியோரைச் சந்தித்தோம்.
''தாரமங்கலத்தை புதிய நகராட்சியாக தரம் உயர்த்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பகுதியில் 7 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோடைக்காலங்களில் 15 நாள்கள் வரையிலும் கூட குடிநீருக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. தினமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
அதேபோல் மழைநீர் சேகரிப்பு கட்டுமான வசதியை கொண்டு வர வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் மழைநீர் சேகரிப்பு அவசியம்.
இங்கு சாலை வசதிகள் நன்றாக இருக்கிறது. உள்கட்டமைப்புக்கு தரமான சாலைகள் அவசியம்தான். ஆனால் அதன் பேரில் சாலையோர மரங்களை வெட்டி அழித்தது ஏற்க முடியாது. மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். இதெல்லாம் இந்த நகராட்சியின் புதிய உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.
இவர்களில் உஷா, ''பெண்களுக்கான நலத்திட்டங்கள், இலவச பஸ் பயணம், உள்ளாட்சி அமைப்புகளில் அதிகளவில் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது என பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த, அளித்து வரும் கட்சிக்கு வாக்களித்தேன்,'' என்றார்.
இவரின் அக்கா பூஜா கூறுகையில், ''தமிழகத்தில் விவசாயம், இயற்கை பாதுகாப்பு என மாற்று சிந்தனைகளை முன்வைக்கும் கட்சிக்கு வாக்களிக்க விரும்பி, வாக்குச்சாவடிக்கு வந்தேன். ஆனால் அந்தக் கட்சியின் சின்னம் பேலட் இயந்திரத்தில் காணவில்லை. அதனால் எந்தக் கட்சியையும் சாராத, புதியவருக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் சுயேச்சைக்கு வாக்களித்தேன்" என்றார்.
சேலம் சிஎஸ்ஐ பாலிடெனிக் கல்லூரி வாக்குச்சாவடியில் முதல்முறையாக வாக்களித்த இளம்பெண் மெர்லின் ஏஞ்சல் கூறுகையில், ''நாட்டுக்கு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் இளைஞர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரே களம், தேர்தல்தான். அதனால் நானும் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்களிக்கிறேன் என்ற அளவில் வாக்களித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் கட்சிக்கு வாக்களித்தேன்,'' என்றார்.