Skip to main content

வேலூரில் வெற்றி யாருக்கு... பரபர கள நிலவரம்!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக, திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரி, விக்ரவாண்டி உள்ளிட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையி்ல் நிலையில், வேலூர் தொகுதிக்கும் மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதி இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 5 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளது. தற்போது அதிமுக சார்பாக களமிறங்கியுள்ள ஏ.சி சண்முகம் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். மேலும் 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தலில் அதிமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டுயிட்டும் வெற்றிபெற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த அவர், எம.ஜி.ஆர் பெயரில் பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். திமுக சார்பாக களமிறங்கும் கதிர் ஆனந்த் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். 

 

 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அது திமுகவுக்கு சற்று சாதகமான தொகுதியாகவே இருந்து வருகிறது. 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சியிலும் திமுக மண்ணை கவ்விய நிலையில், வேலூர் மாநகராட்சியில் மட்டும் சில ரவுண்டுகள் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில், அதிமுகவுக்கு தேனி போன்று, திமுகவுக்கு வேலூர் மாவட்டம் என்று அக்கட்சியினர் கூறுவதும் உண்டு. அந்த வகையில் வேலூர்  நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுக-வை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கே.பி குப்பம், வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் முஸ்ஸிம் வாக்குகள் அதிக அளவு உள்ளது திமுகவுக்கு சற்று சாதகமாக பார்க்கப்படுகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளதால் இந்த வாக்குகள் முழுவதுமாக திமுகவுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.  ஆனால், பாமகவுக்கு இங்கு ஓரளவு செல்வாக்கு இருப்பது அதிமுகவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தாலும், மக்களவைக்கு என்று தனியாக இடைத்தேர்தல் நடைபெற்று இல்லை. எனவே, வேலூர் மக்களவையின் தொகுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்