ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் வரலாற்றில் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் பேரரசன் ராஜராஜனின் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழில் நடந்த வேண்டும் நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு யாகசாலை முதல் கருவறை வரை, நேற்று வரை ஒலித்த தமிழ் இன்று பிரமாண்ட கலசத்திலும் ஒலித்தது.
இந்த தமிழ் ஒலியை கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால் மக்களுக்கான எந்த ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவில்லை. சாலை ஓரங்களில் கும்பகோணம் கலைக் கல்லூரி மாணவர்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்க வைக்கும் ஓவியங்களை தீட்டினார்கள். அந்த ஓவியங்களுக்கு மெருகூட்டக் கூட சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களில் புல் தரைகளை காணமல் போய் கட்டாந்தரையாக காணப்பட்டது.
கருவறையிலும், கலசத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதை காண சிவ பக்தர்கள் மங்கள இசைக் கருவிகளுடன் வந்து இசைத்து பக்தர்களை மகிழச் செய்தனர். வி.பி.ஐ.பி நுழைவாயில் சிவகங்கை பூங்கா வழியாக திறக்கப்பட்டிருந்தது. அங்கே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் சண்டைதான் நடந்தது.
தமிழக முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருவதை விரும்பவில்லை என்று தொடக்கத்தில் இருந்து நக்கீரன் சொல்லி வந்தது உண்மை தான் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டனர்.
அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஆர்.காமராஜ் வரவில்லை., வைத்திலிங்கம் எம்.பி. திருமங்கலக்கோட்டையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனால் குடமுழுக்கு நடக்கும் இடத்திற்கு வரவில்லை. ஆனால் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மட்டும் அரசியல் படைகளோடு வராமல் குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்தார். எந்த பதவியும் இல்லாத மாஜி எம்.பி. பரசுராமன் வந்தார். இவ்வளவு தான் அ.தி.மு.க பட்டியல்.
ராஜராஜன் ஆயிரமாவது விழாவை சிறப்பாக நடத்திய திமுகவினராவது மூடநம்பிக்கையை ஒழித்துவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ நீலமேகம், திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன், ஒரத்தநாடு எம்.எல்.ஏ புல்லட் ராமச்சந்திரன் என்று யாருமே அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
பாஜகவில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் இல.கணேசன் வந்திருந்தனர். திரை நட்சத்திரம் ஆர்.பார்த்திபன் வந்திருந்தார்.
ஆர்.பார்த்திபன்.. தமிழ் மன்னன் கட்டிய கோயிலில் தமிழ் ஒலித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இனி தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்றார்.
ஏன் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் வரவில்லை.. வந்தால் பதவி போகுமா? என்ற வழக்கமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில்.. தஞ்சை மக்கள் கூறும் போது.. அரசியல்வாதிகளுக்கு இன்னும் மூடநம்பிக்கை போகவில்லை. தி.மு.க ஆட்சியில் குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகும் ஆட்சி தொடர்ந்தது. ராஜராஜன் ஆயிரமாவது நிகழ்ச்சி நடந்தது அதன் பிறகும் ஆட்சி தொடர்ந்தது. ஆனால் தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தார்கள்.
அதேபோலதான் அதிமுகவினருக்கும். அவர்கள் நினைப்பது எல்லாம் பதவிகள் போச்சுன்னா மறுபடியும் யாரு வாங்கிக் கொடுப்பாங்க என்ற கேள்வி தான் அவர்களிடம் எழுந்து நிற்கிறது. மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டியவர்களே அதை மக்களிடம் வளர்ப்பது மூடத்தனமாக தான் தெரிகிறது என்றனர்.
தமிழ் ஒலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்று போராடியவர்களின் ஒருவரான பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.. பெரிய கோயிலில் ஓதுவார்கள் குடம் தூக்கி தண்ணீர் ஊற்றியதும், தமிழ் ஒலியை கேட்டதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சி என்பது தமிழ் ஒலிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த அனைவருக்குமான மகிழ்ச்சியாக பார்க்கிறேன். அடுத்து வரலாற்று சிறப்பு மிக்க கோயிலை கட்டிய பேரரசன் ராஜராஜன் சிலையை கோயிலுக்குள் வைக்கவும், உடையாளூரில் ராஜராஜன் நினைவிடம் அமைக்கவும் குழு அமைத்து இயக்கம் நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.