கோவையில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக யானை வழித்தடங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம், கோவையில் சம்பந்தப்பட்ட யானை வழித்தட பகுதிகளில் மண் அள்ளப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டிருந்தனர். கடந்த 27/11/2024 அன்று நடைபெற்ற விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பார்த்த நீதிபதிகள் திடீரென ஆவேசமாகி தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
'குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரியவரும் என்ற மாவட்ட நீதிபதியின் அறிக்கையில் 40 சதவீதம் மட்டுமே வெளி வந்திருக்கிறது. மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையை பார்க்கும் பொழுது பெருமளவில் மண் அள்ளப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை எப்படி ஈடுகட்டப்போகிறார்கள்? சட்டவிரோதமாக மண் அள்ளியதை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள்? பெரிய பெரிய மலைகளே காணாமல் போகின்றன. இதில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் என்ன நடவடிக்கை எடுத்தார்? மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த அறிக்கை பார்க்கும் பொழுது மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மண்ணை நீரோடை பாலம் அமைப்பதற்காக எடுத்துச் சென்றதாக மாவட்ட நீதிபதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் மண் எடுத்தது யார் என்று தெரியவில்லை காவல்துறையினர் கூறியுள்ளனர். இதை நாங்கள் எப்படி நம்புவது? நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் ஏன் செயல்படுகிறீர்கள்?. சட்டவிரோதமாக மண் எடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியாத இதே நிலை தொடர்ந்தால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் என பல்வேறு கேள்விகளுடன் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம், தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
அடுத்த விசாரணையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனுவை விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோவையில் யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பாக அரசு கொடுத்திருக்கும் அறிக்கைக்கு சென்ற உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் 'சட்டவிரோதமாக மண் எடுத்தவர்களிடம் இருந்து 119 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்வார்' என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் யானை வழித்தடங்களில் 5 லட்சம் கன மீட்டர் மண் அள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'யானை வழித்தடங்களில் அதிக அளவில் மண் எடுக்க அனுமதித்தது யார்? எங்கே அந்த மண்? யாருக்காக மண் வெட்டி கொண்டு செல்லப்பட்டது? யானை வழித்தட பகுதிகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவது ஏன்?' என பல்வேறு கேள்விகளை மீண்டும் எழுப்பி, இதற்கான பதில்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு மீண்டும் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.