Skip to main content

சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல்; நீதிக்கான கூட்டணி அபார வெற்றி!

Published on 16/12/2024 | Edited on 16/12/2024

 

25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கடைசியாக 1999ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, தேர்தல் நடத்த வேண்டும் என்று மறைந்த எம்.யூ.ஜே மோகன் உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. 

25 ஆண்டுகளுக்குப் பிறகு, பதிவுத்துறை சட்டத்தின்படிசென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. இதனை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று (15-12-24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 1,502 வாக்குகளில் 1,371 வாக்குகள் பதிவான நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் வேதநாயகம் தலைவராகவும், அசிப் பொதுச் செயலாளராகவும், மணிகண்டன் பொருளாளராகவும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. அதே போல், இணைச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன் சேவியர் வெற்றி பெற்றார். துணை தலைவர்களாக மதன், சுந்தர பாரதி ஆகியோரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஸ்டாலின், விஜய கோபால், பழனி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

 

படங்கள்:- எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்