நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். இந்நிலையில் 18 இடங்களில் திமுக - அதிமுக நேரடியாக களத்தில் மோதவுள்ளது.
மேலும், அதிமுகவில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக போட்டியிடும் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தேமுதிக அலுவலகம் உள்ள கோயம்பேட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.