சில மாதங்களுக்கு முன்பு குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தன் தாயை தொலைத்த நிலையில் வனத்துறையினர் குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தது. இந்நிலையில் அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீரோடையில் அடித்து வரப்பட்டது பிறந்த 4 மாதமே ஆன குட்டியானை ஒன்று. அதனை மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். திங்கட்கிழமை அன்று வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் யானையை குட்டியானையின் தாயாக இருக்கலாம் என நினைத்து குட்டி யானையை அதனிடம் விட்டு சென்றனர். அடுத்த நாள் காலை சென்று பார்க்கையில் அதே பகுதியில் குட்டி யானை தனியாக சுற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதற்கான உணவுகளை வழங்கி பராமரித்து வருவதோடு, தாய் யானையிடம் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.