தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (25.10.2024) மதியத்தில் இருந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக வைகை ஆற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மதுரையில் உள்ள சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்க இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மதுரையில் நேற்று மாலை 3 மணி முதல் 03.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 08.30 - மாலை 05.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ மழை பொழிந்துள்ளது எனத் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வடகிழக்கு பருவமழை ஒரு நாள்தான் பெய்துள்ளது. இன்னும் பெரிய மழை இருக்கப் போகிறது. திராவிட மடல்... திராவிட மடல்... என்று சொல்கிறார்கள். 57 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற திமுக, அதிமுக 57 ஆண்டுகள் ஆட்சி செய்தும் இன்று மழை என்று வந்தாலே போட்டை பிடிக்கிறார்கள். அப்போ என்ன நீங்கள் நிர்வாகம் செய்தீர்கள்? என்ன கட்டுமானம் செய்தீர்கள்? இதுதான் திராவிட மாடலா?
திராவிட மாடல் என்றால் மழை பெய்தால் போட்டை தேடி செல்வதுதான் இவ்வளவு காலம் செய்தீர்களா? என்ன திட்டமிட்டீர்கள். அப்போ நீங்கள் திட்டமிட்டதெல்லாம் தோல்விதானா? இவ்வளவு காலம் நீங்கள் செய்ததெல்லாம் தோல்விதானா? உலக நாடுகளில் மழை பெய்தால் போட்டை தேடிப் போகிறார்களா? படகை தேடிப் போகிறார்களா? இல்லையே. அந்த அளவிற்கு கட்டுமானங்கள் இருக்கிறது. மழை வந்தால் நீர் செல்ல வடிகால்கள் இருக்கிறது. இங்கு மட்டும் ஏன் வடிய மாட்டேன் என்கிறது. இனி திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். எத்தனையோ தலைசிறந்த மாடல்கள் இருக்கிறது. ஜப்பான் மாடல்; அமெரிக்கா மாடல்; ஐரோப்பிய மாடல் என எத்தனையோ மாடல் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு திராவிட மாடல் என்று சொல்லி ஒருமழை பெய்தாலே போட்டை தேடிப்போகிறீர்கள். கொரோனா பாதிப்புக்கு பிறகு மக்கள் ரொம்ப வீழ்ச்சியில் இருக்கிறார்கள். மக்களுக்கு உதவியாக அரசு இருக்க வேண்டும்'' என்றார்.