மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவத்தில் 13க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ஐந்து லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தியை உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். இதன் பின் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ வேளாண் விவசாய தொழில் இல்லாத சமயங்களில்தான் மக்கள் இந்த வேலைக்கு வருகிறார்கள். அதோடு மக்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்துத்தான் வேலைக்கு வருகிறார்கள். அங்கு இது மாதிரி உயிர்ப்பலி ஆகும்போது வேதனையாகக் கண்ணீர் வடிக்கும் நிகழ்வாக இருக்கிறது. ஆகவே பயிற்சி பெற்று அல்லது பயிற்சி கொடுத்துப் பாதுகாப்பு உபகரணங்களோடு பாதுகாப்பு விதிமுறைகளையும் 100% கடைப்பிடித்திருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்” எனக் கூறினார்.