சென்னை மாநகராட்சியின் சொத்து வரி
எப்போது உயர்த்தப்படும்? ஐகோர்ட் கேள்வி
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி எப்போது உயர்த்தப்படும் என்பது குறித்து வரும் திங்களன்று மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பெடு சந்தையில் உள்ள கடைகள் 1996 லிருந்து -2015 வரை சொத்து வரி செலுத்தாததால் அவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்தது.இதனை எதிர்த்து கோயம்பெடு கடை வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்பட வேண்டிய சொத்து வரி கடந்த 16 ஆண்டுகளில் 4 முறை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது ஏன் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர், இது சம்பந்தமான பரிந்துரைகளை கடந்த 2010ம் ஆண்டு மாமன்றத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் இதற்கு மாமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் 2016 அக்டோபர் 24-ம் தேதியுடன் மாமன்றத்தின் பதவி காலம் முடிவடைந்துள்ளதால் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தற்போது மாநகராட்சி நடவடிக்கைகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு சொத்து வரியை மாற்றியமைக்க அதிகாரம் உள்ளது.
மேலும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என தெரியாது, தற்போது அமலில் உள்ள சொத்து வரி தொகை 265 கோடி ரூபாய் அளவில் உள்ளது, இதுவே 4 முறை வரியை மாற்றி இருந்தால் 1840 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,சென்னையின் பரப்பு விரிவுபடுத்தப்பட்டு பெரு நகர சென்னை மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்களிலிருந்து பெறும் சொத்து வரியின் மூலம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் எப்போது சொத்து வரி மாற்றி அமைக்கப்படும் என வரும் 21ம் தேதி மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தெரிக்க வேண்டும் என தெரிவித்த நீநிபதி, தவறினால் இரு அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
- சி.ஜீவா பாரதி