கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ளது பெ.பூவனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - ஜெகஜோதி தம்பதிகளின் மகன் செந்தில்வேல். 40 வயதுள்ள இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறார். சுக்குவான்சூக்கு என்ற இவர் வேலை செய்யும் கம்பெனி நஜ்ரான் என்ற பகுதியில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஊரில் உள்ள தனது மகன் சுதீத்துக்கு மொட்டை அடித்து காது குத்துவதற்கு வந்த அவர் மீண்டும் சவுதிக்கு சென்றார்.
வேலைக்கு சென்ற அவருக்கு கடந்த மாதம், வீட்டில் உள்ளவர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அதே ஊரைச் சேர்ந்த வீரபாண்டியன் மஸ்கட்டில் வேலை செய்கிறார். இவரும் செந்தில்வேலும் நண்பர்கள். அடிக்கடி இருவரும் வீடியோகாலில் பேசிக்கொள்வது வழக்கமாம்.
அப்படித்தான் கடந்த மாதம் வீரபாண்டியன் போன்போட்டுள்ளார். செந்தில்வேலுக்கு போட்ட போனை எடுத்து பேசியவர், நாங்கள் போலீஸ் பேசுகிறோம். உங்கள் நண்பர் இறந்து போனார் என்று சொன்னதோடு, முகம் மூடப்பட்ட செந்தில்வேல் உடல் என்று ஒரு சடத்தை காட்டியதாக, செந்தில்வேலின் குடும்பத்திற்கு வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதனால் செந்தில்வேலின் குடும்பத்தார் கதறித் துடித்தனர். அரேபியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் மூலம் உண்மை நிலவரம் பற்றி விசாரிக்க சொன்னபோது செந்தில்வேல் இறந்து போனது உண்மை என்றும், போலீஸ் வழக்காகியுள்ளது. மேலும் விசயம் கேட்க பயமாக உள்ளது. செந்தில்வேல் கொலை செய்யப்பட்டாரா? எப்படி இறந்தார் என்ற விபரத்தை அந்த நாட்டு அரசுதான் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.
இதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் 24.08.2018 அன்று செந்தில்வேல் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். அரேபியா நாட்டுக்கு சென்ற செந்தில்வேல் பற்றி தெரியப்படுத்துமாறு மனு அளித்தனர். மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததோடு சரி இன்றுவரை ஒரு தகவலும் இல்லை.
இந்த விசயம் நமக்கு தெரியவர செந்தில்வேல் குடும்பத்தினரை சந்தித்தோம். அப்போது அவர்கள், செல்தில்வேல் அடிக்கடி போன் பேசுவான். கடந்த மாதம் முதல் போன் சுவிட்ஆப் என்று வந்தது. இப்போது 10 நாட்களாக போன் போட்டால் போன் மணி மட்டும் அடிக்கிறது. யாரும் எடுப்பதில்லை. அங்குள்ள எங்கள் அக்கம் பக்க ஊர்கார்களிடம் கேட்டால் சிலர் இறந்தது உண்மை என்கிறார். சிலர் விபரம் தெரியவில்லை என்கிறார்கள். போலீஸ் கெடுபிடி செய்கிறது என்கிறார்கள்.
எங்களால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் அளவிற்கு மட்டுமே விவரம் தெரியும். மற்றப்படி யாரைபோய் பார்ப்பது என்ன செய்வது என்று புரியலீங்க. நாங்களோ சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களுக்கு அரசுதான் உதவி செய்ய வேண்டும் என்றார் செந்தில்வேல் அப்பா ராமலிங்கம்.
எங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பத்தை காப்பாற்ற அரேபியா சென்றார். அடிக்கடி போனில் பேசுவார். எங்களுக்கு 5 வயதில் சுதீத் என்ற மகன் உள்ளான். அவரை நம்பிதான் நாங்கள் உள்ளோம். அவர் என்ன ஆனார் என்ற உறுதியான தகவல்கூட இல்லை. தினமும் கதறி அழுதபடி உள்ளோம். எங்களுக்கு உண்மை நிலவரத்தை யார் சொல்லுவார்கள் என்று அழுதபடியே கூறினார் செந்திவேல் மனைவி கனகா.
மகன் சுதீத்தோ, அம்மா... அப்பா எனக்கு மொட்டை போட்டுவிட்டு போனார். எப்பமா திரும்பி வருவாரு. இன்னைக்கா, நாளைக்கா என்று அப்பாவியாக கேட்க ஒட்டுமொத்த குடும்பமும் மட்டுமல்ல அந்த கிராமமே அழுகிறது.
வறுமை கொடுமைக்கு பிழைக்கப்போன ஒரு அப்பாவி இளைஞன் உயிரோடு இருக்கிறாரா? இறந்தாரா? என்று தெரியாமல் குழப்பதில் உள்ளது இந்த குடும்பம். உலக விவரமே உள்ளங்கையில் உடனுக்குடன் கிடைக்கின்ற இந்த காலத்தில் மனு கொடுத்து ஒரு மாதம் கடந்தும் கூட அரசு இயந்திரங்கள், இந்த இளைஞரின் நிலைமையை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது மத்திய அரசு முடங்கி கிடக்கிறதா? நாடு நாடாக சுற்றும் மோடி இந்திய குடிமகனின் நிலை என்ன என்பதை எப்போது கண்டுபிடித்து கொடுப்பார் என்கிறார்கள் ஊர் மக்கள்.