சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். ஸ்டாலினுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். கைதாகி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையிலும் மணமக்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை மெரினா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைதாகி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையிலும் மணமக்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்துவைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதிக்கு இன்று திருமாவளவன் தலைமையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் காலையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக திருமாவளவன் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இதனையடுத்து பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதி உள்ளிட்டோர் திருமாவளவன் தங்க வைக்கப்பட்ட மண்டபத்திற்கு சென்றனர். அங்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் இருந்தனர். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதிக்கு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு தலைவர்கள் தங்களது திருமண வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.