பக்தியிசை, மெல்லிசை, திரையிசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் அது தமிழிசையாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் 96 ஆவது மார்கழி இசைத் திருவிழாவை மியூசிக் அகாடமியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஒரு மாதக்காலம் நடக்கும் இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சங்கீத கலாநிதி விருதினையும் முதல்வர் வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர், “வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்கிற கருத்துத்தான் நாட்டுக்குத் தேவையான ஒன்று. இந்தக் கொள்கை அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல; அரசியல் கட்சிகளை மட்டும் வலியுறுத்துவதாகச் சுருங்கி நினைத்துவிடக் கூடாது. ஒவ்வொரு தனிமனிதக் கொள்கையாக அது மாறவேண்டும்.
அதேபோல் மியூசிக் அகாடமி போன்ற இசைக்கலை அமைப்புகளும் மன்றங்களும் தமிழிசைக்கும் தமிழ்ப்பாடல்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும். பக்தி இசையாக இருந்தாலும், மெல்லிசை, திரையிசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் அது தமிழிசையாக இருக்கவேண்டும்” எனக் கூறினார்.