காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு, காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.
தொடர்ந்து, கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், கர்நாடக அரசு சார்பில் குடிநீர் பிரச்சனை, நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது. 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று வாதிடப்பட்டது. இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய மற்றும் ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்க முடியாது எனக் கூற முடியாது” என்று கூறியுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் 'இந்த காவிரி விவகாரத்தில் கர்நாடக தரப்பு, பிரதமர் மோடி தலையிட்டு பேசித் தீர்க்க வேண்டும் என பழைய நிலைக்கு காவிரி விவகாரத்தை கொண்டு செல்கிறார்களே' என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ''பேச்சுவார்த்தை என்பதே கிடையாது. பல ஆண்டுகளாகப் பேசி பேசிப் பார்த்து பயன் இல்லாத காரணத்தால் தான் நாங்கள் நடுவர் மன்றத்திற்கு போனோம். எனவே அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். இனி எதுவாக இருந்தாலும் உச்சநீதிமன்றம் தான்'' என்றார்.
கர்நாடக முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது போல தமிழக முதல்வர் செல்வாரா? என்ற கேள்விக்கு, “அதெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்தது'' என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி முடிந்துள்ளது குறித்த கேள்விக்கு, ''அதெல்லாம் எனக்கு தெரியாது'' எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.