Skip to main content

ஒற்றைத் தலைமைப் பற்றி பேசியதில் என்ன தவறு?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! 

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

What is wrong with talking about a single leadership? - Interview with former Minister Jayakumar!

 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்று (18/06/2022) அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானத்திற்காக அமைக்கப்பட்ட தீர்மானக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். 

 

இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ப.வளர்மதி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், வைகைச்செல்வன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சென்னையில் நடந்த கூட்டத்தில் தொண்டர்களின் மனநிலையை மாவட்டச் செயலாளர்கள் கூறினர். 12 பேர் கொண்ட தீர்மானக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். மூன்றாவது கட்டமாகப் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தோம். ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்பதை மாவட்டச் செயலாளர்களே முடிவு செய்வர். 

 

ஒற்றைத் தலைமை பற்றிப் பேசியதில் என்ன தவறு; வெளிப்படைத் தன்மையோடுதான் பேசினேன். பொதுவெளியில் பேசி உடைப்பதற்கு ஒற்றைத் தலைமை விவகாரம் ஒன்றும் சிதம்பரம் ரகசியமில்லை. பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்" எனத் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாகக் கூறிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே, அ.தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகிகள் 75 பேரில் எடப்பாடி பழனிசாமிக்கு 69 பேர் ஆதரவு அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், 64 பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 11 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.   

 

 

சார்ந்த செய்திகள்