காஸ் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க என்னென்ன பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் பொன்னம்மாபேட்டையில் ஒரு வீட்டில் திங்கள்கிழமை (அக். 17) காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாத கைக்குழந்தை உள்பட 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, காஸ் சிலிண்டர் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் 9.50 லட்சம் வீடுகளுக்கான எல்.பி.ஜி காஸ் சிலிண்டர் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. வீடுகளில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள காஸ் ஏஜன்சி முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காஸ் சிலிண்டரை பாதுகாப்புடன் கையாளும் வழிமுறைகளை அச்சிட்ட துண்டு பிரசுரங்களை சிலிண்டர்களில் ஒட்டி விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கும் பகுதி எப்போதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். சிலிண்டரை படுக்கை நிலையில் வைத்து பயன்படுத்தக்கூடாது. எப்போதும் செங்குத்தான நிலையில் மட்டும் வைத்திருக்க வேண்டும். காஸ் அடுப்பை சிலிண்டரை விட உயரமான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். காஸ் சிலிண்டரை அடுப்புடன் இணைக்கப்படாதபோது சிலிண்டரை அதற்குரிய வெள்ளை நிற மூடியால் மூடி வைத்திருக்க வேண்டும்.
காஸ் சிலிண்டரில் உள்ள பொருள்களை நுகர்வோரே நேரடியாக மாற்றாமல் தங்களுடைய முகவரை தொடர்பு கொள்வதுடன் சர்வீஸ் மெக்கானிக்கை அழைத்து சிலிண்டர் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். காஸ் அடுப்பு உபயோகத்தில் இல்லாதபோது, இரவு நேரங்களில் ரெகுலேட்டரை கண்டிப்பாக அணைத்து வைக்க வேண்டும். சமைக்கும்போது அடுப்பின் அருகிலேயே இருக்க வேண்டும். காற்று அதிகமாக அடிக்கும் இடத்தில் இருந்தால் அடுப்பு அணைந்து காஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஐ.எஸ்.ஐ தரம் உடைய காஸ் சிலிண்டரின் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். காஸ் அடுப்பு அருகில் விளக்கு, ஊது வத்திகளை வைக்கக்கூடாது. காஸ் கசிவு ஏற்பட்டிருந்தால் உடனடியாக ரெகுலேட்டரை அணைத்து விடுவதுடன் எல்லா ஜன்னல்கள், கதவுகளையும் திறந்து வைத்திட வேண்டும். காஸ் கசிவு ஏற்பட்டுள்ள நேரத்தில் மின்சார சுவிட்சுகளை போடவோ, அணைக்கவோ கூடாது. அவசர உதவிக்கு, '1906' என்ற கட்டணமில்லா உதவி மைய எண்ணை அழைக்கவும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) துரைமுருகன், பிபிசிஎல் மண்டல மேலாளர் முகேஷ் ரோஜ்ஷா, காஸ் ஏஜன்சி முகவர்கள் கலந்து கொண்டனர்.