Skip to main content

’அவனுக்கு மட்டும் மிட்டாய், எனக்கு மிட்டாய் இல்லையா? இது என்ன ஸ்கூல் பசங்க சண்டையா?’-மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

 

m2

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (18-10-2018)  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் செங்குந்தர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவராக இருந்து மறைந்த எஸ்.டி.உகம்சந்த் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, மதுராந்தகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

 

 படத்திறப்பு நிகழ்வில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம்:

’’ மறைந்த நம்முடைய உகம்சந்த் அவர்களுடைய திருவுருவப் படத்தை திறந்து வைத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய கழக அமைப்புச் செயலாளர் அவர்கள் சொன்னது போல, உகம்சந்த் அவர்கள் மறைந்த நேரத்தில் நான் லண்டனிலே இருந்த காரணத்தால் நிறைவாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்தேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதற்குப் பிறகு அவருடைய திருவுருவப் படத்தினை திறந்து வைக்க நான் வரவேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் கருதிய நேரத்தில் உடனடியாக நானும் அதற்கு உரிய தேதியை வழங்கி அதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தச் சூழ்நிலையில்  நம்முடைய தலைவர் கலைஞர்  உடல் நலிவுற்று மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார்.

 

அந்தக் காலகட்டத்தில் உகம்சந்தினுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், இந்த நேரத்தில் நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை என்று என்னிடத்திலே எடுத்துச் சொன்னார்கள். நான் கூட நம்முடைய அமைப்புச் செயலாளரிடமும், மாவட்டச் செயலாளரிடமும் சொல்லுகிற போது நான் வரவில்லை என்று சொன்னாலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, ரத்து செய்யாமல் அந்த நிகழ்ச்சியை நம்முடைய மாவட்டக் கழக முன்னோடிகளை வைத்து நடத்தி முடியுங்கள் என்று நான் என்னுடைய வேண்டுகோளை எடுத்து வைத்தேன்.

 

ஆனால், உகம்சந்த் குடும்பத்தை சார்ந்து இருக்கக்கூடியவர்கள் ‘இல்லை, இல்லை நாங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விடுகிறோம். நீங்கள் என்றைக்கு வருகிறீர்களோ, உங்களுக்கு வருவதற்கு எப்படி வாய்ப்பு இருக்கிறதோ அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொள்கிறோம்’ என்று சொல்லி இந்த நிகழ்ச்சியை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியிலே நானும் நம்முடைய இயக்கத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய நிர்வாகிகளும் இங்கே இருக்கக்கூடிய நீங்களும் கலந்துகொண்டு நம்முடைய உகம்சந்த் அவர்களுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறோம்.

 

m1

 

உகம்சந்த் அவர்களைப் பற்றி நான் அதிகமாக உங்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘கொல்லன் தெருவிலே ஊசி விற்ற கதை’. அவரைப் பற்றி அறிந்திருக்க கூடியவர்கள்தான் நீங்கள், அவரைப் பற்றி புரிந்திருக்கக் கூடியவர்கள் தான் நீங்கள். அப்படிப்பட்ட உங்களிடத்திலே அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை. அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றியிருக்கிறார். மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்துதான் பணியாற்றிட வேண்டும் என்ற நிலை இல்லாமல் பொறுப்புகள் இல்லாத நேரங்களிலும் அவர் தன்னுடைய கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்று எண்ணிப் பார்க்கிறபோது நாம் உள்ளபடியே அவருக்கு வணக்கத்தைச் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். பொறுப்பு இருக்கக்கூடியவர்கள் பொறுப்பு இருக்கின்ற காரணத்தால் பணியாற்றுவார்கள். பொறுப்பில் இல்லாதவர்கள் பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது, அப்பொழுதும் பொறுப்போடு பணியாற்ற வேண்டும் என்ற ஒரு பாடத்தை நமக்கு தந்திருப்பவர் நம்முடைய உகம்சந்த் அவர்கள்.   

 

நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த உடனே என்னிடத்திலே உகம்சந்த் அவர்களைப் பற்றி டைப் செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஒரு மூன்று பக்கங்கள் கொண்ட ஒரு பிரதியை என்னிடத்தில் வழங்கினார்கள். நான் அதை எடுத்து படித்துப் பார்த்தேன். உள்ளபடியே நான் வியர்ந்து போயிருக்கிறேன். காரணம் அவர் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு பொது வாழ்விலே தன்னை ஒரு அங்கமாக ஐக்கியமாக்கிக் கொண்டு அவர் ஆற்றிருக்கக்கூடிய பணிகளையெல்லாம் தலைப்புச் செய்திகளாக அதை டைப் செய்து என்னிடத்திலே தந்திருக்கிறார்கள். அதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் மாணவர் பருவத்திலேயே உலக ஆரோக்கிய மையத்தினுடைய செயலாளராக செயல்பட்டிருக்கிறார்.

 

1972-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய கமிட்டி உறுப்பினராகவும் அவர் பொறுப்பேற்று தன்னுடைய கடமையை நிறைவேற்றியிருக்கிறார். 1979-ல் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு 80-ம் ஆண்டு மதுராந்தகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கடமையை நிறைவேற்றியிருக்கிறார். தொடர்ந்து 89-ல் இரண்டாவது முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகு, மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களோடும், மறைந்த ஜெயலலிதா அவர்களோடும் தன்னுடைய பொதுவாழ்விலே அரசியல் வாழ்விலே தனக்கு வழங்கப்பட்டிருந்த அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

 

ஆனால், 1998-ல் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் மீது ஒரு நம்பிக்கையைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கையிலே தன்னுடைய நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, இனி அ.தி.மு.க.,வில் இருந்தால் தன்னுடைய பணியை சிறப்பாக ஆற்றமுடியாது என திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் தான் தன்னுடைய பணியை சிறப்பாக நிறைவேற்றிட முடியும் என்று உணர்ந்து உறுதியோடு ஏற்றுக்கொண்டு தலைவர் கலைஞர் தலைமையிலே அவர் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து மறைகின்ற நாள் வரையிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக, கழகத்தினுடைய பெருமைக்காக, கலைஞருடைய சிறப்புக்காக அவர் பாடுபட்டிருக்கிறார், பணியாற்றியிருக்கிறார். அப்படிப்பட்ட சிறந்த ஆற்றலாளரை, சிறந்த செயல்வீரரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். 2007-ம் ஆண்டு இதே மதுராந்தகம் தொகுதியிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அலுவலகம் மற்றும் வணிக வளாகம் இவருடைய முயற்சியால், இவருடைய பங்களிப்பால் கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தை திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதை எண்ணிப்பார்க்கிற போது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.

 

அதேபோல் பல பொறுப்புக்களில் இருந்து அவர் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறுபான்மை நலப்பிரிவினுடைய தலைவராக கடைசிகாலகட்டத்தில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேலும் வலு சேர்க்கக்கூடிய வகையிலே சிறுபான்மை மக்களின் உள்ளங்களை கவரக்கூடிய வகையிலே அவர் சிறப்பாக தன்னுடைய பணியை நிறைவேற்றி காட்டியிருக்கிறார்.

 

mm

 

ஒவ்வொரு முறையும் அவர் தன்னுடைய சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு அப்பாற்பட்டிருக்கக்கூடிய சில வணிகர்களை, சில பெரியவர்களை, தாய்மார்களை எல்லாம் அவர் ஒவ்வொருமுறையும் தலைவருடைய இல்லத்துக்கு தலைவர் இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்திற்கு, தொடர்ந்து என்னை சந்திக்க என்னுடைய இல்லத்திற்கு அவர் அழைத்துவந்த காட்சிகளை எல்லாம் நான் எண்ணிப்பார்க்கிறேன். அதுவும் தேர்தல் காலங்களில் எப்படி பணியாற்றிட வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றக்கூடிய அந்த ஆற்றல்மிக்க அந்த படைவரிசையிலே சிறப்புக்குரியவராக உகம்சந்த் அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்.

 

எத்தனையோ பணிகளை மாவட்டச் செயலாளர் சுந்தர் அவர்கள் பேசுகிற போது குறிப்பிட்டுச் சொன்னார், நான் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அப்பொழுது அவர் சட்டமன்ற உறுப்பினராக கூட இல்லை. நம்முடைய காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர் தான் சட்டமன்ற உறுப்பினர், நான்தான் சட்டமன்ற உறுப்பினராக இல்லையே என்று ஒதுங்கிவிடாமல், ‘நான் தான் இந்த மதுராந்தகம் தொகுதிக்கு நிரந்தரமான சட்டமன்ற உறுப்பினர்’ என்ற அந்த நிலையிலே பொறுப்பில் இருந்தாலும் இல்லையென்றிருந்தாலும் மக்களுக்கு பணியாற்றக்கூடிய அந்தப் பணியில் இருந்து பின்வாங்கி விடக்கூடாது என்ற அந்த உறுதியோடு பல ஆண்டுகாலமாக மூடப்பட்டிருந்த அந்த சர்க்கரை ஆலை திறக்கப்பட வேண்டும் என்பதிலே அதிகமான அளவிற்கு கவனத்தை செலுத்தி ஏறக்குறைய ஒரு பத்து பதினைந்து முறை இதற்காக என்னையும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களையும் சந்தித்து பிரச்சனைகளையெல்லாம் சுட்டிக்காட்டினார்.

 

அதற்குப் பிறகு அதிகாரிகளையெல்லாம் அழைத்துப்பேசி ஒரு முடிவெடுத்து தீர்க்கப்படாமல் இருந்த பல்வேறு சிக்கலில் சிக்கிக்கொண்டிருந்த அந்த சர்க்கரை ஆலை இன்றைக்கு திறக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அதற்கு முழுகாரணம் மூல காரணம் உகம்சந்த் அவர்கள் தான். இப்படி பல்வேறு பணிகளில் இருந்து அவர் தன்னுடைய கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறார். ஆகவே, அந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை இன்றைக்கு சிறப்பாக நடைபெறுவதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தலைக் கூட நியாயமாக நடத்தமுடியாத நிலையிலே இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி இருந்துகொண்டிருக்கிறது.

 

என்ன காரணம் என்று கேட்டால், முறைகேடாக தில்லுமுல்லுகளை செய்து அந்தக் கூட்டுறவு சங்கங்களில் எப்படியாவது இடம்பெற வேண்டும் என ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

 

தேர்தல் நியாயமாக நடந்தால் ஆளுங்கட்சியிலே இருக்கக்கூடியவர்கள் வெற்றிபெற முடியாது. ஆகவே, அதற்காக பல கலவரங்களை பல சூழ்ச்சிகளை, சதிகளை எல்லாம் செய்து அந்த தேர்தல் நடத்த திட்டமிட்ட நேரத்தில் நம்முடைய தோழர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று முறையாக தேர்தல் நடைபெறவில்லை என்று தடை உத்தரவு பெற்றிருக்கிற காரணத்தால் இன்றைக்கு அது தடைபட்டுப் போயிருக்கிறது.

 

ஏற்கனவே, ஆட்சியை நடத்திக் கொள்ளை அடித்தது போதாதென்று கூட்டுறவு சங்கங்களில் கொள்ளையடிப்பதற்கு திட்டமிட்டு இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது. ஆகவே, அதை எல்லாம் தவிடுபொடியாக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு இருந்துகொண்டிருந்தாலும் நீங்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. நேற்றைய தினம்கூட ஒரு விபத்தின் காரணமாக, ஜெயலலிதா மறைந்த காரணத்தால் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மன்னிக்க வேண்டும், எடுபிடி பழனிசாமி. அவரை எடுபிடி என்று தான் சொல்லவேண்டும். நான் ஏதோ தவறாக விமர்சித்து பேசுவதாக எண்ணிவிடக்கூடாது. மத்திய அரசு என்ன பணி சொன்னாலும் எந்த உத்தரவிட்டாலும் அடிபணிந்து செய்பவரை எடுபிடி என்று சொல்லாமல், எஜமானர் என்றா சொல்ல முடியும்?

 

ஒரு எடுபிடியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்றைக்கு உழுந்தூர்பேட்டைக்கு சென்று பேசிய அந்த பேச்சுக்களை எல்லாம் தொலைக்காட்சியில், அல்லது பத்திரிகைகளிலே வந்திருக்கிறது. இதுவரையிலே தமிழ்நாட்டிலே பொறுப்பிலிருந்த நேரத்தில் முதலமைச்சர் மீது வழக்கு போட்ட வரலாறு இதுதான் முதல் முறை. ஏன் அகில இந்திய அளவிலே இருக்கக்கூடிய மாநிலங்களில் எல்லாம்கூட கணக்கெடுத்துப் பார்த்தால் ரொம்ப அபூர்வம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னுடைய துறையை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் அடிப்படையிலே தன்னுடைய உறவினருக்கு அந்த கான்ட்ராக்டை கொடுத்திருகிறார்கள். ஏறக்குறைய 3000 கோடி ரூபாய்க்கு மேலே அதிலே ஊழல் நடைபெற்றிருக்கிறது. ஆகவே, இதை உடனடியாக விசாரிக்க வேண்டும், இதை தடுத்தாக வேண்டும் இதற்குரிய தண்டையை அவருக்கு வழங்கிட வேண்டும் என்று, இந்த மேடையிலே அமர்ந்திருக்கக்கூடிய அமைப்புச் செயலாளர் தான் அந்த வழக்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே சென்னை உயர் நீதிமன்றத்திலே தொடுத்தார்கள். சென்னை உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு தந்திருக்கிறது. என்றால், இதிலே முகாந்திரம் இருக்கிறது. ஆகவே முதலமைச்சர் தன்னுடைய சம்பந்திக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கியிருக்கிறார் என்று, அவருடைய சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்திலே தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆகவே, இதையெல்லாம் அடிப்படையாக வைத்து முகாந்திரம் இருக்கிறதென்று சொல்லி இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால், உத்தரவு போட்ட அடுத்த வினாடியே அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு அந்த வழக்கை சந்திக்காமல், உழுந்தூர்பேட்டையிலே போய் அவர் இதை திசைதிருப்புகிற வகையில் நாங்களும் தி.மு.க மீது வழக்கு போடுவோம் என்கிறார்.

 

இந்த ஸ்கூல் பசங்க நீங்க பார்ப்பீங்க, ஒரு மிட்டாய் கொடுத்தால் அவனுக்கு மட்டும் மிட்டாய், எனக்கு மிட்டாய் இல்லையா? என்று கேட்டு சண்டை போட்டுக் கொள்வார்கள். அந்த மாதிரி என் மீது மட்டும் வழக்கா? உன் மீதும் வழக்கு போடுகிறேன் என்கிறார். எங்கள் மீது வழக்கு போடுங்கள்! நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்! எத்தனையோ வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டதுண்டு. எம்.ஜி.ஆரே எங்கள் மீது வழக்கு போடலையா? சர்க்காரியா கமிசன் வந்திருந்தது மறந்திருப்பீர்களா? அதுகுறித்து விசாரணை நடத்தும்போது எம்.ஜி.ஆர் என்ன சொன்னார், ‘என்னுடைய நண்பன் சேலத்தைச் சார்ந்த கண்ணன் சொன்னார், எனக்கு தெரியாது’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

 

இன்னும் கேட்கிறேன், சென்னை மாநகரத்திலே ஏறக்குறைய 9 மேம்பாலங்கள் நான் மேயராக இருந்த போது கட்டப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு, அதற்காக வழக்கு போட்டார்கள் என்ன வழக்கு என்று கேட்டீர்கள் என்றால், பாலம் பழுதாகி உள்ளது, பாலம் முறையாக கட்டப்படவில்லை, ஊழல் நடந்துள்ளது என்று ஜெயலலிதாவே சொன்னார்கள். அதற்காக ஒரு வழக்கும் போட்டார்கள். வழக்கு போட்டது மட்டுமல்ல இரவோடு இரவாக தலைவர் கலைஞர் அவர்கள் வீட்டிலே தூங்கிக் கொண்டிருக்கிறபோது காவல்துறையைச் சார்ந்த அதிகாரி உள்ளே புகுந்து தரதரவென இழுத்து வந்த அந்தக் கொடிய காட்சிகளெல்லாம் தொலைக்காட்சியிலே பார்த்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் அத்தனைபேரும் வேதனைபட்டார்கள், ரத்தக்கண்ணீர் வடித்தார்கள்.

 

பாலம் வீக்கென்று சொன்ன ஜெயலலிதா அதே பாலத்தின் மேல் தான் தொடர்ந்து கோட்டைக்கு போய் கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். பாலம் வீக்கென்று சொல்லி நம் மீது வழக்கு. வழக்கு போட்டு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஐந்து வருடமாக ஒரு சார்ஜ் சீட் ஃபைல் பண்ண முடிந்ததா? நான் கேட்கிறேன். தலைவரை கைது செய்தீர்கள். என்னை கைது செய்தீர்கள், பொன்முடியை கைது செய்தீர்கள் கோ.சி.மணியை கைது செய்தீர்கள். இப்படி பலபேரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள் அதற்குப் பிறகு வழக்கு போட்டீர்கள். வழக்கு போட்டதற்கு பிறகு அதே அ.தி.மு.க ஆட்சி ஒரு சார்ஜ் சீட் ஃபைல் செய்ததா என்றால், கிடையாது. இது தான் உண்மை.

 

2ஜி 2ஜினு ஒரு பிரச்சினையை கிளப்பினார்களே, எவ்வளவு திட்டமிட்டு பிரச்சாரம் நடந்தது. அது என்ன ஆனது? நீதிமன்ற தீர்ப்பில் எந்த முகாந்திரமும் இல்லை, அத்தனை பேரும் விடுதலை! இது தான் தி.மு.க. நாங்கள் எத்தனையோ முறை சிறைக்குப் போய் இருக்கிறோம். ஆனால் இவர்களைப் போல கொள்ளையடித்து விட்டு போகவில்லை.

 

இதே எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தி.மு.க தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்கிறார். அதை இன்றைக்கு நாங்கள் போய் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டோம். அந்த வழக்கு போடப்பட்டதற்கு பிறகு இதுவரையிலே 7 வருடம் ஆயிற்று. இதுவரையில் அதுபற்றி விசாரணை நடந்ததா, கிடையாது. எந்த ஆதாரமும் கிடையாது, எந்த முகாந்திரமும் கிடையாது. எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆனால், விசாரணை கமிஷன் அவருக்கு ஒரு அலுவலகம், 3 கார்கள், போலீஸ் ஏறக்குறைய 10 கோடி ரூபாய் அந்த நீதிபதிக்கே செலவு. இதைக் கண்டித்து உயர்நீதிமன்றம் என்ன செய்தது என்றால், அந்த கமிஷனையே கலைத்து விட்டது. இது தேவையற்ற கமிஷன் அரசினுடைய பணம் வீணாக செலவாகிறது. இதை ஆட்சியாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

ஆனால், முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீதான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது? ஆதாரங்கள் இருக்கிறது, அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது, எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதை எதிர்த்து நியாமாக எடப்பாடி என்ன செய்திருக்க வேண்டும்?

 

சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கியிருக்க வேண்டும். வாங்குவேன் என்று சொன்னார் இதுவரைக்கும் வாங்கவில்லை. ஆனால், வாங்குவதற்கு நாம் தடைபோட வேண்டும் அதை வாங்கினால் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சொல்லி, நம்முடைய ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சார்பில் கேவியட்டும் போட்டு வைத்த்துள்ளோம். எங்களுக்கு தைரியம் இருக்கிறது, தெம்பு இருக்கிறது நாங்கள் கேவியட் போடுகின்றோம், தலைமைச் செயலக வழக்கில் எங்களுக்கு ஸ்டே கொடுத்துள்ளார்கள் அதை எதிர்த்து அப்பீலுக்கு செல்லும் தைரியம் உங்களுக்கு இல்லை. ஆனால், உழுந்தூர்பேட்டையில் வந்து புலம்பிக் கொண்டு போயிருக்கிறீர்கள்.

 

18 எம்.எல்.ஏ தீர்ப்பு வரட்டும் வந்ததற்கு பிறகு தான் இருக்கிறது கதை. ஏதோ ஆட்சியில் இருக்கிறோம், பதவியில் இருக்கிறோம் அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய காலம் வரப்போகிறது. இந்த லஞ்ச ஊழல்களை எல்லாம் ஒழிக்க, கொள்ளையடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த கூட்டத்தையெல்லாம் ஒழிக்க அப்பழுக்கற்ற நிலையிலே இந்த தொகுதியிலே பாடுபற்று பணியாற்றிய உகம்சந்த் படத்தை திறந்து வைக்கக்கூடிய நேரத்தில் இதை எல்லாம் எடுத்துச் சொல்லுவதற்கு காரணம். அப்பழுக்கற்ற ஒரு நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட நீங்கள் கழகத்திற்கு என்றைக்கும் துணை நிற்க வேண்டும், உகம்சந்த் கனவை நிறைவேற்ற பாடுபட வேண்டும், பணியாற்றிட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். ’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.