Skip to main content

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு...

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
What is the position of the Government of Tamil Nadu regarding online classes? -High Court order to respond!

 

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை, மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில்,  தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்பது  குறித்து,  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

 

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு  மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது, ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும்வரை, ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு  தாக்கல் செய்துள்ளார்.

 

இதுபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால், மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி,  விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், ஜூலை 15-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 

What is the position of the Government of Tamil Nadu regarding online classes? -High Court order to respond!

 

இந்நிலையில்,  மத்திய அரசு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என,  2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, பதில் மனுவாக மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்ற நோய் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட  நீதிபதிகள், மத்திய அரசினுடைய வழிகாட்டுதலின்படி,  தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, அடுத்து வருகிற திங்கட்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்