கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மனைவி கீதா(24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
கீதாவுக்கு கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடு மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(23) என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த மாதம் 5ஆம் தேதி கீதா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தனது பேஸ்புக் நண்பர் செல்வத்தை சந்தித்துள்ளார்.
அதன் பிறகு செல்வம், கீதாவை அருகில் உள்ள திம் மலைகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று வாலிபர்கள் அங்கு வந்து அவர்களை மிரட்டி கீதா அணிந்திருந்த 8 சவரன் தாலி செயின், கம்பல் உட்பட 11 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
செல்வமும் செய்வது அறியாமல் பயத்தில் உறைந்துள்ளார். ஆனால், கீதா, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்ற இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான காவல்துறையினர் கீதாவிடமும், செல்வத்திடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், கீதா நடந்தவற்றை கூறும் போது, செல்வம் பேசிக்கொண்டிருந்த போது தனியாக எழுந்து சென்று போனில் பேசிவிட்டு வந்தார் அதன் பிறகே இந்தச் சம்பவம் நடந்தது என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் செல்வத்திடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், கீதாவை தனிமையில் வரவழைத்து அவருக்கு தெரியாமல் நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் கூறிய செல்வம், அவர்கள் உதவியுடன் கீதாவை மிரட்டி 11 சவரன் நகை பறித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதையடுத்து செல்வம் மற்றும் அவரது நண்பர்களான ரோடு மாமந்தூரைச் சேர்ந்த முத்தரசன்(24), பிரபு(21) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நாகலூரைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவரை தீவிரமாக தேடிவருகின்றனர். பிடிபட்ட அவர்களிடம் இருந்து கீதாவின் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.