கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணத்தில் மர்மம் விலகாத அதே வேலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சரளா என்ற மற்றொரு மாணவியின் மரணத்திலும் மர்மங்கள் தொடர்கின்றது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்துவருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கீழ்ச்சேரியில் இயங்கிவரும் ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவி கடந்த 25ம் தேதி பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த சூரியநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான பூசனம், முருகம்மாள் தம்பதியின் 17 வயது மகள், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழ்ச்சேரியில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அந்தப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த ஜூலை 25ம் தேதி காலை இறைவணக்கக் கூட்டம் நடந்துள்ளது. அது முடிந்து மாணவிகள் விடுதி அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது மாணவி, தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சத்தமிட்டுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு வந்த பள்ளி நிர்வாகிகள் போலீஸ்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் டி.எஸ்.பி சந்திரலேகா மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேசமயம், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மாணவியின் மாணவியின் அண்ணன், அவரது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து புகார் கொடுத்துள்ளார். அதேபோல், மாணவி படித்த பள்ளி மற்றும் மாணவியின் சொந்த கிராமத்தில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மாணவியின் அண்ணனிடம் இந்த மரணம் தொடர்பாக பேசினோம், “என் அப்பாக்கு உடம்பு சரியில்லை. திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சம்பவத்தன்று முன்தினம் இரவு வரை, என் தங்கை போனில் நல்லாதான் பேசினார். காலையில எங்க சித்தப்பாவுக்கு போன் வந்தது. அப்போது, ‘உங்க மகளை (என் தங்கை) பூச்சி கடிச்சிடிச்சி வாங்க என்றனர். உடனடியாக நாங்கள் பள்ளிக்கு சென்றோம். அங்கு அரை மணி நேரம் கழித்து "மாடில இருந்து விழுந்துட்டானு சொன்னாங்க. அதன்பிறகு தூக்கு போட்டுக்கொண்டதாகவும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் சொன்னார்கள். மூன்று மணிநேரம் கழித்து தான் அவர் உயிரோடு இல்லை என்று சொன்னார்கள். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார் கண்கலங்கியப்படி.
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்து மாநிலத்தை அதிரச்செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து சில தினங்களிலேயே திருவள்ளூர் மாணவி மரணமடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்யபிரியா உடனடியாக நிலமையை மேலிடத்திற்கு தெரிவிக்க, ஆயுதப்படை ஐ.ஜி கண்ணன் தலைமையிலான 900 போலிசார் சம்பவம் நடந்த பள்ளி, மாணவியின் சடலம் வைக்கப்பட்டிருந்த திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் சொந்த ஊரான தெக்களூர் கிராமம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி தேன்மொழி, திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி பேகர்லா செபாஸ் ஆகியோர் ஈடுபட்டனர். மேலும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை எஸ்.பிக்களும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அந்தப் பள்ளியில் எஸ்.பி, தாசில்தார், குழந்தைகள் நல அதிகாரிகள் ஆகியோர் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி செல்வகுமார் மற்றும் திரிபுரசுந்தரி ஆகியோர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
26ம் தேதி காலை 8 மணிக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவியின் பிரேதப்பரிசோதனை துவங்கி பகல் 1 மணி அளவில் நிறைவடைந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரசிஸ்ரீவத்சன், நாராயணபாபு வைரமாலா, பிரபு அடங்கிய மருத்துவக்குழு இந்த பிரேதப் பரிசோதனையை நடத்தினர். பிரேதப் பரிசோதனை வீடியோவாகவும் பதிவுச் செய்யப்பட்டது. மாணவியின் பிரேதப் பரிசோதனை நடந்தபோது, மருத்துவமனை வளாகத்தின் வெளியே அதிகப்படியான மக்கள் கூடினர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
திமுகவின் திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பூபதி ஆகியோரும் அங்கு வந்தனர். மாணவிக்கு இழப்பீடும் அவரது வீட்டில் ஒருவருக்கு வேலையும் அவரது தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. மேலும், மாணவி மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக மாணவியின் சடலத்தை வாங்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். அதன்பின் அவர்களுடன் காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மாணவி தரப்பினர் சமாதானம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் அவரது அண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின் அங்கிருந்து மாணவியின் சொந்தக் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் மாலை ஆறு மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த அனைத்து நிகழ்வுகளிலும், டி.ஐ.ஜி சத்யபிரியா, மூன்று மாவட்ட எஸ்.பிகள் மற்றும் ஆயுதபடை போலீஸ்சார் ஆகியோர் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மாணவி மரணம் குறித்து இன்னும் தீவிரமாக விசாரித்தோம் அப்போது மாணவியின் சித்தி, “முதலில் பூச்சு கடித்தது என்றும், பிறகு தூக்கு மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், பள்ளி அறையிலா அல்லது குளியலறையிலா அல்லது விடுதியிலா என்று தெளிவாக கூறவில்லை. அதை தான் மாணவியின் அண்ணன் புகாராக கொடுத்துள்ளார். மாணவியின், அப்பா உடல்நிலை சரியில்லை என்பதை பற்றி கூறியதும் அவள் வருத்தப்பட்டது உண்மை. ஆனால் தற்கொலை செய்யும் அளவு என்ன நடந்தது என்பது தெரியவில்லை” என்றார்.
மாணவியுடன் படித்த வேறு ஒரு மாணவியின் தாய், “84 மாணவிகள் தங்கி இருக்கும் அந்தப் பள்ளி விடுதியின் வார்டன் ரொம்பவும் ஸ்டிட்டு. மாணவிகளிடம், எல்லாம் வேலையும் வாங்குவார். அதனாலே அந்தப் பள்ளியை விட்டு என் மகளை நிறுத்திட்டேன். ஆனால் இது வரை இது போலப் புகார்கள் வந்ததில்லை” என்றார்.
இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். அவர்களது விசாரணையில் உண்மை காரணம் விரைவில் தெரியவரும்.