தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி அமைத்திருந்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, நீட் பாதிப்பை ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவை எதிர்த்து பாஜகவின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவும் நேற்று (13.07.2021) நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நீட் ஆய்வுக் குழுவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. ராஜன், ''நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மொத்தம் 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர். மற்றபடி ஆய்வு தொடர்பான தகவல்களை நாங்கள் சொல்லக்கூடாது. சொன்னால் தப்பாகிவிடும். அதைச் சொல்வதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை. நீட் தேர்வின் தாக்கம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆய்வு செய்து நீட் தேர்வு பொதுமக்கள் மத்தியில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அறிக்கையைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் மற்ற விவரங்களை அரசிடம்தான் கேட்க வேண்டும்'' என்றார்.