கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி ஒருவர் விசாரணை முடிந்து காவல் வாகனத்தில் ஏற மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் விசாரணைக் கைதி ஒருவர் போலீசாரிடம் 'டீ வாங்கி தரியா... இறங்கி ஓடி விடவா... முடிந்தால் என்னை சுட்டுப் பாருங்க'' என குதர்க்கமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கன்னியாகுமரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். அதன்படி அண்மையில் போலீஸ் வேனில் கைதிகளை ஏற்றிக்கொண்டு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த கைதிகள் கூட்டத்திலிருந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த தனிஷ் என்ற இளைஞர், நடுவழியில் போலீசாரிடம் டீ வாங்கி கொடுக்க சொல்லி அடம் பிடித்துள்ளார். அப்பொழுது போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர், போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை தொட்டு ''இந்த துப்பாக்கியில் குண்டு இருக்கா அண்ணா... லோடு பண்ணிருக்கியா... நாவேணா வண்டியை விட்டு இறங்கி ஓடுறேன் முடிஞ்சா என்ன சுடுங்க...'' என அலப்பறையில் ஈடுபட்டான். ஆனால் பாதுகாப்பு கருதி நடுவழியில் வண்டியை நிறுத்தி டீ குடிக்க முடியாது என்று தெரிவித்த போலீசார், சிறைக் கைதியின் அலப்பறைக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனைச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் அதே கைதி கடந்த 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் காவல் வாகனத்தின் சக்கரத்தில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்ட கைதி தனிஷ், ''நீங்க தான் அண்ணா இதுக்கு காரணமே...'' எனக்கூற போலீசார் ''அட வாடா...'' என கையை பிடித்து எழுப்ப, ''அண்ணா நீ என்ன தொடாத... நீதான் என்ன சாவுன்னு சொன்ன.... நீ தொட்டா பெரிய பாவம் அண்ணா...'' என அலப்பறையில் ஈடுபட்டான். அதனைத்தொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்தி கைதி தனிஷை அழைத்துச் சென்றனர்.