Skip to main content

திருக்குறளுக்காக தமிழ் கற்க சொன்ன காந்தி, மாநிலப்பட்டியலில் கல்வி... இன்னும் என்ன பேசினார் முதலமைச்சர்?

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

What did the Chief Minister MK Stalin say's in Gandhi Grama university

 

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காந்திகிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் அண்ணாமலை, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மித் சிங் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள் தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர். இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்த தமிழ் மண். வட இந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். 

 

What did the Chief Minister MK Stalin say's in Gandhi Grama university

 

அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் வரவேற்கிறேன். கல்வியின் வழியாக மனிதரை சமூகத்துக்குப் பயனுள்ளவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் உயர, நாடு உயரும் என்ற காந்தியக் கொள்கையின் அடிப்படையில், தேசத்தந்தை காந்தியடிகளின் நல்லாசியோடு அவர்களுடைய சீடர்களான டாக்டர் ஜி.ராமச்சந்திரன், அவரது துணைவியார் டாக்டர் சௌந்தரம் அவர்களால் தொடங்கப்பட்ட கிராமியப் பயிற்சி நிறுவனம் இன்று நிகர்நிலை பல்கலைக்கழகமாக வளர்ந்து, சிறந்து விளங்குகிறது.

 

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும், வெளிநாடுகளைச் சார்ந்த மாணவர்களும் இங்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் பயின்று வருகின்றனர் என்பதை அறியும்போது பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு ஏதுவாக, கல்விக் கொடையாக 207 ஏக்கர் நிலத்தினை இப்பல்கலைக்கழகத்திற்காக வழங்கிய சின்னாளப்பட்டியைச் சேர்ந்த புரவலர்களை இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

 

தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவை கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின் கீழ் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் திகழ்கிறது. இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைத் தீட்டி வருகிறது. பெண்களின் உயர்கல்வியினை ஊக்குவிக்க புதுமைப்பெண் என்கிற மூவலூர் இராமாமிர்தம்மாள் பெயரில் உயர்கல்வி உறுதித் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில நிதியுதவித் திட்டம் போன்றவற்றின் மூலமாக அனைவரும் உயர்கல்வி பயில தமிழ் நாடு அரசு ஆவனம் செய்து வருகிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்