Skip to main content

“இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?” - நீதிமன்றம் கேள்வி

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

What are the steps taken by the Department of Hindu Religious Affairs court questioned

 

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, “சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோவில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன. மேலும், கோவிலுக்குச் சொந்தமாக 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. அந்த நிலம் வருவாய்த் துறை அதிகாரிகளின் உடந்தையுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோவிலையும், அதன் சொத்துக்களையும் மீட்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்குத் தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளதாகவும், அதன் பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோவிலில் நியமிக்கப்பட உள்ள தகுதியான நபர் பற்றிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.

 

மேலும், கோவில் நிலங்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், கோவில் சொத்துக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடனும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். கோவில் நிலத்தின் தற்போதைய உரிமையாளரைக் கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்