சிவகாசியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியை இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினர் நேரில் சந்தித்து குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்க அறிக்கை வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.
நாடு முழுவதிலும் குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும், அப்படி பாதிக்கப்படும் பட்சத்தில் முதல் ஆளாக நானே நின்று தடுப்பேன் எனவும் தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தெளிவான அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் , சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியை அவரது வீட்டில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து குடியுரிமைச் சட்டம் தொடர்பான விளக்க அறிக்கையைக் கொடுத்தனர். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமையில் அந்தக் கட்சி நிர்வாகிகள் அமைச்சரைச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.
அப்போது, இஸ்லாமிய சமுதாயத்தினரின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்று இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகளிடம் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார். அதற்கு, "சிவகாசியில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளீர்கள். பாதுகாப்பாக இருந்துள்ளீர்கள். உறவு முறை கூறி எங்களுடன் பழகிவந்துள்ளீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் எங்களை விட்டு உங்களைப் பிரிக்க முடியாது. என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம். இஸ்லாமியர்களின் கோரிக்கையை தமிழக முதல்வரி்ன் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்." என்று அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அமைச்சரிடம் கொடுத்த மனுவில்,
'தமிழக முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும் தமிழக வரலாறோடு இரண்டறக் கலந்த ஒன்றாகும். தமிழக முஸ்லிம்கள் 15-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய தொண்டு வரலாற்றுப் பதிவு ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்களின் பங்கு கால ஏடுகளில் செதுக்கப்பட்ட ஒன்றாகும். இந்த நிலையில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தமிழக முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில், குறிப்பாக அசாம் மாநில சூழ்நிலையை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும், முஸ்லிம்கள் நீங்கலாக என்ற சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு ஆதரவு நிலை இருந்தாலும் அகில இந்திய அளவில் அதற்கான எதிர்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் குடியுரிமை பதிவேட்டின் (என் ஆர்சி) தேவையின்மை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர் சி) செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட மாட்டாது என்று தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும். நடக்கவிருக்கும் 2020, 2021 -ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தேசிய மக்கள் பதிவேடு மேம்படுத்துதல் என்ற அச்சம் செயல்படுத்தப்படமாட்டாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். எங்களது கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்ய வேண்டும் என, பல்வேறு விரிவான தகவல்கள் அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்து ஆதரவு நிலை எடுத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசி வரும் நிலையில், இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் அவரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருப்பது, அரசியல் ரீதியிலான மத நல்லிணக்கத்துக்கு வழிவகுப்பதாக, சமூக நோக்கர்களால் பேசப்படுகிறது.