ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டோம்!
டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி!!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள குடகு முகாமில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்கள். இதுகுறித்து டிடிவியின் தீவிர ஆதரவாளரான ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
நக்கீரன் : தலைமை செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து நோட்டீசுக்கு விளக்கம் அளித்தீர்களா?
தங்கத்தமிழ்ச்செல்வன்: சபாநாயகரிடம் கால அவகாசம் கேட்டு கொடுத்த மனுவுக்கு இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை. இதனால் நாங்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க நேரில் வரும் சூழ்நிலையும் இல்லை.
நக்கீரன்: நீங்கள் விளக்கம் அளிக்காவிட்டால் 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறதே?
தங்கத்தமிழ்ச்செல்வன் : எங்களிடம் உள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம். பொதுச் செயலாளர் சசிகலா வழிகாட்டுதலின் பேரில் அவரை முதல்வராகவும் கொண்டு வந்தோம். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தி இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்த ஓ.பி.எஸ்.-யும், அவருடன் இருந்த பத்து எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்துக்கொண்டு பதவி கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் எடப்பாடியை முதல்வராக்கிய எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறார்கள். தமிழக போலீசை வைத்து எங்களை மிரட்டுகிறார்கள். ஜெயலலிதாவின் வழியில் நடக்கிறவர்கள் தான் நாங்கள் சசிகலா, தினகரன் உத்திரவின் பேரில்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்தோம். கவர்னரிடம் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் கொடுத்தோம்.
அந்த கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை இல்லை. அதுபோல் கட்சிக்கு துரோக்கம் செய்துவிட்டு சென்ற ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை. அவர்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? இந்நிலை தொடர்ந்து நீடித்தால் ஆட்சியை கவிழ்க்க கூட தயங்கமாட்டோம். இன்று அண்ணன் தினகரனும் கூடியிருக்கிறார். அவரது வழியில் ஆட்சியை கவிழ்க்க நாங்களும் தயங்க மாட்டோம். துரோக செயல் புரிந்ததற்காக மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பி.எஸ்.-ம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
-சக்தி-