கர்நாடகா, கேரளாவில் தமிழ்நாட்டின் நீராதாரத்தைப் பாதிக்கும் எந்த ஒரு புதிய அணையையும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, நடப்பு ஆண்டில் முதன்முதலாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. நவ. 13ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் மேட்டூர் அணை நிரம்பியது. அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41வது ஆண்டாக முழுமையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகு, அணை மின்நிலையம் வழியாக உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, துறை அலுவலர்கள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (16.11.2021) காலையில் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம், வலது, இடது கரை, ஆய்வுச்சுரங்கம், பவளவிழா கோபுரம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அணையின் கொள்ளளவு, நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றம், அணை பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதையடுத்து, திப்பம்பட்டி நீரேற்று நிலைய பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தின் கீழ் 4 ஏரிகளுக்குத் தண்ணீர் செல்ல மின்விசையை இயக்கிவைத்தார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மேட்டூர் அணை 120 அடியை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கடந்த அதிமுக அரசு, முழுமையாக நிறைவேற்றவில்லை. இந்தத் திட்டம் அவசர கதியில் தொடங்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக ஆய்வு செய்து நிறைவேற்றுவோம். முதற்கட்டமாக 4 ஏரிகளுக்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
கேரளா, கர்நாடகத்தில் தமிழகத்தின் நீராதாரங்களைப் பாதிக்கும் எந்த ஒரு புதிய அணையையும் கட்ட திமுக அரசு அனுமதிக்காது, அதிமுகவும் அனுமதிக்காது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் எம்.ஜி.ஆர். காலத்திலேயே உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.” இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, மேட்டூர் அணை செயற்பொறியாளர் தேவராஜன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி, அவைத்தலைவர் கோபால், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், பார்த்திபன் எம்.பி. ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், ஒகேனக்கல் சென்று காவிரியில் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தார்.