'தேர்தல் ஆணையர் விதிமுறைகளை நடிகர் விஜய் பின்பற்ற வேண்டும், யானை சின்னத்தை வேறு எந்த கட்சியும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ''நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறிய கருத்து விஜய் மீது அவருக்குள்ள பாசத்தினால் சொல்லியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் ரிசர்வ் சட்டம் 1968 படி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகளின் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தங்களது யானை சின்னத்தை யாரும் எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது. நடிகர் விஜய்யை நங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் கட்சியின் சின்னத்தை பயன்படுத்தியது தொடர்பாக கருத்து தெரிவித்த அதேவேளையில் ஊடகங்கள் மூலம் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தோம்.பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதன் தொடர்பான சட்ட நகல்களையும் நடிகர் விஜய்க்கு அனுப்பி உள்ளோம்.
நான்கைந்து நாட்கள் ஆகியும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் தேர்தல் ஆணைய விதியின் படி சின்னம் தொடர்பான புகாரை தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதன் நகலை மாநில தேர்தல் ஆணையத்திடமும் வழங்கி உள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் ''கூட்டணி குறித்துப் பேசுவதற்கான நேரம் இதுவல்ல. தங்கள் கொள்கைக்கு ஏற்புடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும்'' எனவும் அவர் கூறியுள்ளார்.