Skip to main content

ஏப்ரல் மாதம் சாலையில் இறங்கி போராடுவோம்: மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

 

maatru


மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் ஏப்ரல் மாதம் சாலையில் இறங்கி போராடுவோம் என மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.

 

மாநில வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில் மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகளின் கூட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் திங்களன்று (மார்ச் 26) நடைபெற்றது. கூட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களுக்கான இயக்குநர் அத்துல்ய மிஷ்ரா, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அருண்ராய், மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் எஸ்.நம்புராஜன், டி.எம்.என்.தீபக், ரவிச்சந்திரன், வி.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் 40 விழுக்காடு ஊனமிருந்தாலே அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென 2016ஆம் ஆண்டு தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் பிறப்பித்தது.  ஆனால் அந்த அரசாணை இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.  பழைய கடுமையான விதிமுறைகளையே பல மாவட்டங்களில் அதிகாரிகள் பின்பற்றுகின்றனர்.  ஊழலும் தலைவிரித்தாடுகிறது. 5 லட்ச ரூபாய்க்கு கீழ் தனி நபர் ஆண்டு வருமானம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் முதலமைச்சரிடம் பேசி விதி உருவாக்குவதாக 10.08.2017 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வாக்குறுதி அளித்தார். ஆனால் அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

 

மாவட்டங்களில் அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகளைத் தடுக்கவும், முன்னுக்கு வரும் பிரச்சனைகளை களையவும், மாதந்தோறும் கோட்டாட்சியர் தலைமையிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்த வருவாய் நிர்வாக ஆணையர் 6 மாதங்களுக்கு முன்பே உத்தரவிட்டார்.  ஆனால் பெயரளவிற்கு மனுக்கள் வாங்கும் கூட்டங்களாக மாவட்ட ஆட்சியர்கள் நடத்தியுள்ளனர்.  மிகப்பெரும்பாலான கோட்டாட்சியர்கள் இக்கூட்டங்களை நடத்தவில்லை.

 

வட்டாட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் காத்திருப்புப் பட்டியல் ஒட்ட வேண்டும், உதவித்தொகைக்கு 7 பக்க பழைய விண்ணப்பப் படிவத்திற்கு பதிலாக, ஒரு பக்க புதிய படிவம்,  வங்கி சேவையாளர் மூலம் உதவித்தொகை பெற விரும்பாதவர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்குவது ஆகியவை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தும் எதுவும் அமலாகவில்லை என்பதையெல்லாம் ஆணையரிடம் கூறினோம். அப்போது அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவதாக உறுதியளித்தார். ஆண்டு வருமானம் 5 லட்சம் என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அமைச்சரிடம் பேசுமாறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களுக்கான இயக்குநர் அத்துல்ய மிஷ்ரா, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அருண்ராய் ஆகியோரிடம் கூறினார். 

 

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பிரச்சனையில், மாவட்ட அதிகாரிகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க, விரைவில் மாவட்ட ஆட்சியர்களின் தனியான கூட்டத்தை மாநில அரசு நடத்த வேண்டும்.  கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏப்ரல் மாதம் சென்னையில் மாநிலம் முழுவதிலும் இருந்து மாற்றுத்திறனாளிகளை திரட்டி சாலையில் இறங்கி போராடும். கோரிக்கை நிறைவேறும் வரை கலையமாட்டோம். சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சார்ந்த செய்திகள்