தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் 2,000 மினி கிளினிக் துவக்கும் விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி, தமிழகத்தில் உள்ள கிராமப் புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், இந்த மினி கிளினிக் செயல்படும் என்று கூறியுள்ளார். இதன்படி தனது ஊரில் மினி கிளினிக் திறக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர், செல்ஃபோன் டவர் மீது ஏறி, போராட்டம் நடத்தியுள்ளார்.
அப்போது, தமிழக முதல்வர் அறிவித்துள்ள படி எங்கள் சேச சமுத்திரம் ஊரில், மினி கிளினிக் கண்டிப்பாகத் திறக்க வேண்டும். அதுவரை செல்ஃபோன் டவரில் இருந்து இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்துப் போராட்டம் நடத்தியுள்ளார். இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதோடு, கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் உட்பட அனைவரும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். கீழே இருந்தபடி கண்ணனிடம் சமாதானம் பேசி, கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர்.
அந்த இளைஞரோ, தன் ஊரில், மினி கிளினிக் திறக்க வேண்டும். அதுவரை இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். உடனடியாக, சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கண்ணன் வைத்திருந்த செல்ஃபோனுக்க, உங்கள் ஊரில் நிச்சயமாக மினி கிளினிக் திறக்கப்படும் என்று உறுதிகூறி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து சந்தோஷமடைந்த கண்ணன், செல்ஃபோன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அவருக்கு தண்ணீர் கொடுத்துக் களைப்பை நீக்கிய காவல்துறையினர், அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். தன் ஊரில் கிளினிக் திறக்கக் கோரி செல்ஃபோன் டவரில் ஏறி, இளைஞர் நடத்திய போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.