Skip to main content

நீட் தேர்வு: சேலத்தில் ஒரே பெயரிலான மையங்களால் மாணவர்கள் அலைக்கழிப்பு!

Published on 06/05/2018 | Edited on 06/05/2018
neet exam selam


 


சேலத்தில் ஒரே பெயரில் அமைந்த மையங்களால் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் சரியான முகவரி தெரியாமல் பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், உள்ளூர்காரர்கள் சரியான முகவரிக்கு அழைத்துச் சென்று உதவினர்.
 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று (மே 6, 2018) தொடங்கியது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 170 மையங்களில் 1.07 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
 

சேலம் மாவட்டத்தில் 23 மையங்களில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள், தங்கள் பெற்றோர்கள் துணையுடன் நேற்று இரவு முதலே அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

 

neet exam selam


 

முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், தேர்வர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. கைக்கடிகாரம், ஷூ அணியவும், செல்போன், கால்குலேட்டர், காகிதங்கள், பேனா உள்ளிட்ட பொருள்களை எடுத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் உடை கட்டுப்பாடுகளும் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்தன.
 

மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய வேண்டும் என்றும், மாணவிகள் சல்வார் மற்றும் பேன்ட் மட்டும் அணிந்து  வரும்படியும் முன்பே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. துப்பட்டா அணிய தடை விதிக்கப்பட்டது. அணிகலன்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
 

எனினும், பல மாணவிகள் கொலுசு, கம்மல், செயின் உள்ளிட்ட நகைகளை அணிந்து வந்திரு ந்தனர். அவற்றை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அகற்றிவிட்டு உள்ளே செல்லும்படி கூறினர். உடன் வந்த பெற்றோர்கள் அவசர அவசரமாக மகள்களின் கால்களில் உள்ள கொலுசு, கம்மல்களை கழற்றினர்.
 

கூந்தலை வாராமல் (ஃப்ரீ ஹேர்) வந்த மாணவிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அவர்களை ஜடை பின்னிவிட்டு, கிளிப் அணியாமல் செல்லும்படி கூறினர். அதனால் அவசர அவசரமாக பல மாணவிகள் கூந்தலுக்கு ஜடை பின்னிக் கொண்டு தேர்வுக்கூடத்திற்குள் சென்றனர்.
 

சோதனையிடுவதற்கு வசதியாக தேர்வர்களை இரண்டு கட்டங்களாக தேர்வு மையத்திற்கு அழைத்திருந்தனர். முதல் கட்டமாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், இரண்டாம் கட்டமாக 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் அழைக்கப்பட்டு இருந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகே தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
 

காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வருவோருக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை என கூறியிருந்ததால் பலரும் பல மணி நேரங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அருகில் வந்துவிட்டனர். தேர்வர்களுடன் பாதுகாப்புக்காக வந்த பெற்றோர்கள், உறவினர்கள் அந்தந்த தேர்வு மையங்கள் அருகே வெயிலில் காத்துக் கிடந்தனர்.
 

சேலத்தில் வித்யா மந்திர் பெயரில் அயோத்தியாப்பட்டணம், மெய்யனூர், அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி  ஆகிய ஐந்து இடங்களில் ஸ்ரீவித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிகள் செயல்படுகின்றன. நெய்க்காரப்பட்டியில் வித்யா மந்திர் பெயரில் கல்லூரி இயங்குகிறது. இவை அனைத்துமே நீட் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

neet exam selam


 

வெவ்வேறு இடங்களாக இருந்தாலும், ஒரே பெயரில் மையங்கள் அமைந்துள்ளதால் வெளிமாவட்ட தேர்வர்கள் பலர் தவறான மையங்களுக்கு வந்திருந்தனர். குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அயோத்தியாப்பட்டணம் வித்யா மந்திர் மையத்திற்குச் செல்வதற்கு பதிலாக தவறுதலாக மெய்யனூர் வித்யாமந்திர் பள்ளிக்குச் சென்று விட்டார்.
 

அரூரைச் சேர்ந்த ஒரு மாணவி, அம்மாபேட்டை வித்யா மந்திர் பள்ளிக்கு பதிலாக மெய்யனூர் வித்யா மந்திர் பள்ளிக்குச் சென்று விட்டார். முகவரி மாறி வந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கடும் பதற்றத்திற்கு உள்ளானார்கள். முகவரி மாறி வந்த தேர்வர்களை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தாமாக முன்வந்து அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உரிய மையத்தில் சேர்த்தனர். சமூக ஆர்வலர்களும் உதவிகளைச் செய்தனர்.
 

ஒரே பெயரிலான மையங்களை ஒதுக்குவதை தவிர்த்து இருந்தால் வெளி மாவட்ட தேர்வர்கள் கடைசி நேரத்தில் வீணாக அலைக்கழிக்கப்படுவதை தவிர்த்திருக்கலாம் என பெற்றோர்கள் கூறினர்.
 


 

சார்ந்த செய்திகள்