தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக முழுவதும் தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட கிளைகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 54,437 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் 1 லட்சத்தி 4 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
‘எங்களுக்கு அரசு பணியில் இருப்பதாக அரசு வழங்கும் எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை, அதேபோல் அரசிடமும் எங்களுக்கான அரசு ஊழியருக்கான எந்த பயனும் கிடைப்பதில்லை, நாங்கள் யார்’ என்று போராட்டத்தில் கேள்வியை எழுப்பினர். பிறகு மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இவர்களுக்கு ஆரம்பகட்ட மாத ஊதியமாக 7,700 முதல், 30 வருடம் பணிபுரிந்த பிறகு 12 ஆயிரம்வரை கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியருக்குப் பணி கொடையாக 10 லட்சம் ரூபாயும் உதவியாளருக்கு 5 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் சென்னையில் மட்டும் 12 இடங்களில் நடைபெற்றது. அதில் முதல் போராட்டம் கிண்டியில் தொடங்கி புழல்வரை நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அங்கன்வாடி மாநில பொதுச்செயலாளர் டெஷி, “எங்களது இந்த மூன்று கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எங்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சமூகநலத்துறை அமைச்சர் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதே இல்லை, நாங்கள் அரசு சொல்லும் அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.
அரசு பணி என்றுதான் பெயர், ஆனால் எந்த பயனும் இல்லை. ‘அங்கன்வாடி ஊழியர்களுக்கு 21 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 18 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் அறிவித்தால் போராட்டத்தை நிறுத்திக்கொள்வோம். இல்லையேல் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார். இது தொடர்பாக பேசிய அங்கவன்வாடி இயக்குனர் கவிதாராமு “அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுகொண்டோம். கூடிய விரைவில் அவர்களுக்கான நம்பிக்கைக்குரிய பதில் கிடைக்கும்” என்றார்.