அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (26-11-2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரியலூர் மாவட்ட காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தூத்தூர். தங்க. தர்மராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தி 26-11-2020 முதல் தலைநகர் டெல்லியில் ஓராண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆகையால் இந்த வேளாண் சட்டத்தை வாபஸ் பெறப்படும் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி.
விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு மேலும் சட்டமன்றத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து வாபஸ் வாங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக முதல்வருக்கும் விவசாயிகள் சார்பாக நன்றி கூறுகிறோம். மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகள் அனைத்திலும் யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அந்த உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்களில் கூடுதலாக யூரியா பொட்டாஷ் போன்ற தேவையான உரங்கள் இறக்குமதி செய்ய வேண்டும்.
பருவமழை தொடர்ந்து அதிக அளவில் பொழிந்ததன் காரணமாக நெல், பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. ஆகவே தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை, வாய்க்கால்கள் அனைத்தையும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, தூர் வார வேண்டும். ஜெயங்கொண்டம் - வீ கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையில் மணகதி என்ற ஊரில் சுங்க வரி டோல் பூத் அமைக்கப்படுகிறது. வாகனங்கள் அதிக அளவில் செல்கிற பகுதி என்பதால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதல் செலவீடுகள் ஆகும். ஆகவே அந்த டோல் பூத் அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.