புதிய கல்விக் கொள்கையின் தன்மையைத் தெரிந்துகொண்ட காரணத்தால்தான் அதனைக் கடுமையாக எதிர்க்கிறோம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீட் விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் ஆரம்பித்த இந்த மோதலுக்கு பிறகு, உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் தொடர்பான மசோதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும் இந்தி மொழி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கும் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. மேலும் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய ஆளுநர், புதிய கல்விக் கொள்கையைச் சரிவரப் படிக்காமல் அதனைச் சிலர் எதிர்த்து வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். அதில் " புதிய கல்விக் கொள்கையை நன்றாகப் படித்துத் தெரிந்துகொண்ட காரணத்தால்தான் அதனைக் கடுமையாக எதிர்க்கிறோம். ஆளுநர் வேற்றுமையில் ஒற்றுமை என்று சில தினங்களுக்கு முன்பு பேசியிருக்கிறார். எனவே அவர் மாநில உரிமைகளுக்கு மதிப்பளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அதுவே எங்களின் விருப்பம்" என்று கூறினார்.