ஆன்லைன் விளையாட்டு யூட்யூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை சில வாரங்களுக்கு முன்பு காவல்துறையினர் செய்தனர். ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே இன்று அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அவரின் மனைவி கிருத்திகா, "மதன் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதன் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தவர். அதன் மூலமே எங்களுக்கு வருமானம் கிடைக்கும். எந்த தடை செய்யப்பட்ட விளையாட்டையும் அவர் விளையாடவில்லை. மதன் கார், வீடுகள் எதுவும் இதுவரை வாங்கவில்லை. நாங்களே வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். எங்களிடம் ஒரே ஒரு ஆடி கார் மட்டுமே இருக்கிறது. வேறு எந்த சொகுசு காரும் எங்களிடம் இல்லை. நான்கு பேர் திரும்ப திரும்ப கொடுத்த புகார்களைச் சேர்த்துவைத்துக்கொண்டு 200 புகார்கள் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதுகுறித்து எனக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.