புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் முதல்நிலை ஊராட்சியில் சுற்றியுள்ள 17 கிராமங்கள் இணைந்துள்ளது. பெருங்களூரில் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளதால் வெளியூர்களில் இருந்து பணிக்காக வந்தவர்களும் தங்கியுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் குடிதண்ணீர் தொட்டிகளும் ஆழ்குழாய் கிணறுகளும் உள்ளன. போதிய அளவு தண்ணீரும் கிடைக்கிறது. ஆனால் இத்தனை கிராமங்களில் மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி ஆகிய இரு கிராமங்களைத் தவிர மற்ற 15 கிராமங்களிலும் கிடைப்பது உப்புத் தண்ணீர் மட்டுமே. பாதி உப்புத் தண்ணீரோடு காவிரி தண்ணீரும் கலக்கும்போது எல்லாமே உப்பாகவே போகிறது. இதனால் மீதமுள்ள 15 கிராம மக்களும் நல்ல தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கிறார்கள்.
குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள், ''நாங்க என்ன பாவம் செஞ்சோமோ தெரியல. காலம் பூராவும் உப்புத்தண்ணிதான் பயன்படுத்துறோம். இந்த தண்ணியைக் குடிக்கிறதால அடிக்கடி உடல்நலப் பிரச்சனைகளும் வருது. பலருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டிருக்கு. அதனால நாங்க நூறு நாள் வேலை பார்த்து, குடிக்கிறதுக்கும் சமைக்கிறதுக்கும் குடம் ரூ. 10க்கு தண்ணீர் வாங்குறோம். உப்புத் தண்ணியைக் குளிக்கவும் துவைக்கவும்தான் பயன்படுத்துறோம். எங்கள் கிராம மக்களுக்கு எப்பதான் நல்ல தண்ணி கிடைக்குமோ'' என்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நல்ல தண்ணீர் கிடைக்க அமைச்சர் முதல் அதிகாரிகள்வரை மனு கொடுத்து காத்திருக்கிறார்கள். ஊராட்சியின் மனுவுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து, நல்ல தண்ணீர் கிடைக்கும் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குழாய்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றனர்.